ஆக.30,2016. பிலிப்பீன்ஸ் நாட்டில், மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் அறிவித்துள்ள காலவரையறையற்ற இடைக்கால போர் நிறுத்த தீர்மானத்தை வரவேற்றுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
பிலிப்பீன்சில், அரசுக்கும், மாவோயிஸ்ட் புரட்சியாளர்களுக்கும் இடையே, ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் இடம்பெற்ற முதல் சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளின் பலனாக, புரட்சியாளர்கள் இத்தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
நார்வே நாட்டின் ஆஸ்லோவில், இம்மாதம் 22 முதல் 26 வரை நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் பலனாக, வருகிற அக்டோபரில், இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கும், புரட்சியாளர்கள் இசைவு தெரிவித்துள்ளனர்.
பிலிப்பீன்ஸ் அரசு, புரட்சியாளர் கைதிகளுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்யவும், அதேபோல், புரட்சியாளர்களும் தங்களிடமுள்ள இராணுவத்தினரை விடுதலை செய்யவும் இசைவு தெரிவித்துள்ளன.
இப்பேச்சுவார்த்தை குறித்துப் பேசிய, மணிலாவின் துணை ஆயர் Broderick Pabillo அவர்கள், இத்தீர்மானங்கள், நாட்டில் உண்மையான அமைதியைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.
மேலும், லிப்பா பேராயர் Ramon Arguelles அவர்கள், ஆயுத சப்தங்கள் இல்லாமலிருப்பது, அமைதியை எட்டுவதற்கு நல்ல முயற்சி எனக் கூறியுள்ளார்.
பிலிப்பீன்சில்,1968ம் ஆண்டில், கம்யூனிச புரட்சியாளர்கள் தொடங்கிய ஆயுத மோதல்களில், இதுவரை முப்பதாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரசு கணித்துள்ளது.
ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |