2016-08-30 14:51:00

கருக்கலைப்புகளும் கொலையாகவே நோக்கப்பட வேண்டும்


ஆக.,30,2016. சட்டத்திற்கு புறம்பே பிலிப்பீன்சில் மக்கள் கொல்லப்படுவது குறித்து கண்டனத்தை வெளியிடும் நாம், கருவில் குழந்தைகள் கொல்லப்படுவது குறித்தும் நம் கண்டனங்களை வெளியிட வேண்டும் என அழைப்பு விடுத்தார் அந்நாட்டு கர்தினால் அந்தோனியோ தாக்லே.

கருவில் குழந்தைகள் கொல்லப்படுவதும் கொலையே என்பதை, ஏன் சமூக அமைப்புக்கள் ஏற்றுக்கொள்வது இல்லை என்ற கேள்வியை முன்வைத்த கர்தினால் தாக்லே அவர்கள், மனித வாழ்வின் புனிதத்துவத்தை மதிக்கத் தெரிந்த ஒவ்வொரு பிலிப்பீன்ஸ் மக்களும், கருக்கலைப்புகளை எதிர்க்க வேண்டும் என்றார்.

எல்லாவிதமான கொலைகளும் கண்டிக்கப்பட வேண்டிய அதேவேளை, தொழிலாளர்களின் மாண்பைக் கொல்லும் அநீதியான தொழில் முறைகளும் கண்டிக்கப்பட வேண்டியவைகளே என மேலும் கூறினார் கர்தினால் தாக்லே.

குற்றவாளிகள் நீதிமன்றத்திற்கு முன் கொண்டுவரப்படாமல், அரசின் அதிரடிப்படைகளால் கொல்லப்படுவது குறித்து பிலிப்பீன்ஸ் ஆயர்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துவரும் வேளையில், அது குறித்தும் தன் கருத்துக்களை வெளியிட்ட கர்தினால் தாக்லே அவர்கள், கருக்கலைப்புகள், தொழிலாளர் மாண்பு மீறப்படல், ஏழைக் குழந்தைகள் பசியால் வாடும்போது உணவை வீணாக்குதல், இளையோரைச் சாகடிக்கும் போதைப்பொருள் விற்பனை போன்றவையும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை என்றார்.

ஆதாரம் :  CatholicCulture /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.