2016-08-30 15:01:00

இலங்கை தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை


ஆக.,30,2016. அரசியல் கைதிகளில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினரை விடுவிப்பது தொடர்பாக இப்புதன்கிழமை அறிவிக்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்று அண்மையில் கொழும்புவில் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட தீர்மானத்தையொட்டி, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்புதிய அறிவிப்பின்படி, சிறு சிறு குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டவர்களுக்கும், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதவர்களுக்கும், சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கும் விடுதலை அளிக்கப்படவுள்ளது.

மேலும், சிறு குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், வழக்குத் தாக்கல் செய்யப்படாத அரசியல் கைதிகள் ஆகியோரை முன்னுரிமை அடிப்படையில் முதலில் விடுதலை செய்வதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் உலக தினத்தையொட்டி இச்செவ்வாய்கிழமை காலை மன்னாரில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து, தங்கள் உறவுகளின் புகைப்படங்களைத் தாங்கியவாறு அமைதிப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இதுபோன்று, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும், அமைதி ஊர்வலங்கள் இடம்பெற்றன.

கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கென ஒரு தினம் சிறப்பிக்கப்பட, 2010 ம் ஆண்டு, ஐ.நா. அவை பரிந்துரைத்ததையொட்டி, 2011ம் ஆண்டு முதல், இந்த உலக தினம் ஆகஸ்ட் 30ம் தேதியன்று சிறப்பிக்கப்பட்டு வருகின்றது.

ஆதாரம் : TamilWin/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.