2016-08-29 15:21:00

வாழ்வால் தோற்கடிக்கப்பட்டுள்ள மனிதருக்கு இதயங்களைத் திறங்கள்


ஆக.29,2016. வாழ்வால் தோற்கடிக்கப்பட்டுள்ள மற்றும், சமூகத்தாலும், வலிமையானவர்களின் ஆணவத்தாலும், புறக்கணிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இதயங்களைத் திறங்கள் என்று, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருமண விருந்துக்கு அழைக்கப்பட்ட ஒருவர், முதன்மையான இடத்தில் அமர்ந்திருக்கும்போது, அவரைவிட மதிப்பிற்குரியவர் வந்தவுடன், அவர் கடைசி இடத்தில் அமரவேண்டிய நிலை ஏற்படுவது பற்றி விளக்கும் திருமண விருந்து உவமையை விளக்கிய திருத்தந்தை இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

ஏழைகள், பசியாய் இருப்போர், ஓரங்கட்டப்படுவோர், அகதிகள் ஆகியோரின் துன்பங்களையும், ஏக்கங்களையும், நம்முடையதாக்கிக் கொள்ளுமாறும் கூறிய திருத்தந்தை, அடக்கத்துடனும், மனத்தாராளத்துடனும் நடந்துகொள்வது குறித்தும் விளக்கினார். தற்பெருமையும், ஆடம்பரமும் இவ்வுலகில் பல தீமைகளுக்குக் காரணமாகின்றன என்றும், நம்மையே நாம் தாழ்த்திக்கொள்ளும்போது, கடவுள் நம்மை உயர்த்துகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தாழ்மைப் பண்பில் வளரவேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை என்பதை வலியுறுத்திய திருத்தந்தை, கடவுளின் இதயத்திற்கு மிகவும் விருப்பமான, அவரால் அளிக்கப்பட்ட விண்ணக வாழ்வின் பலனைத் தேடாது, மனிதர்களிடமிருந்து கிடைக்கும் வெகுமதியைத் தேடும் போக்கையும் எச்சரித்தார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.