2016-08-29 15:41:00

உலக தண்ணீர் வார நிகழ்வில் கர்தினால் டர்க்சன்


ஆக.29,2016. மனிதர், வெறும் மனித வளங்களாக மட்டும் நோக்கப்படும்போது, அவர்கள் கொள்கைகளின் வெற்றிகளை நிர்ணயிப்பவர்களாகவும், பயன்படுத்தக்கூடிய பொருளாகவும் மாற்றப்பட்டு விடுகின்றனர் என்று கூறினார், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.

சுவீடன் நாட்டு ஸ்டாக்கோல்மில் இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள உலக தண்ணீர் வார நிகழ்வில் இத்திங்களன்று உரையாற்றிய, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இவ்வாறு கூறினார்.

விசுவாசமும், முன்னேற்றமும் என்ற தலைப்பில் உரையாற்றிய, கர்தினால் டர்க்சன் அவர்கள், நாம் வாழும் இப்புவியை, வருங்காலத் தலைமுறைகளுக்கு வாழக்கூடியதாய் ஆக்குவது நம்மைச் சார்ந்துள்ள முதலும் முக்கியமுமான கடமை என்பதையும் சுட்டிக் காட்டினார்.

நேர்மையான அரசியல்வாதிகளாகவும், நிர்வாகிகளாகவும் மாறுவதற்கு, இளையோரை, பொறுப்புணர்விலும், ஒருமைப்பாட்டுணர்விலும் பயிற்றுவித்தல், திருமறை நூல்களையும் ஆன்மீக மரபுகளையும் இளையோருக்கு கற்றுக்கொடுத்தல், ஆறுகள், ஏரிகள் போன்றவற்றைத் தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு பல்சமய நிகழ்வுகளை நடத்துதல், தண்ணீரைப் பயன்படுத்துவது பற்றி பயிற்றுவித்தல் போன்ற நடைமுறைகளையும் பரிந்துரைத்தார் கர்தினால் பீட்டர் டர்க்சன்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.