2016-08-29 13:14:00

இது இரக்கத்தின் காலம் : நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்!


ஜென்கை என்பவர், கடந்த காலத்தில் தான் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக, தனது வாழ்நாளில் சில நல்ல காரியங்களைச் சாதிக்க எண்ணினார். அப்போது அந்த ஊரில் ஒரு குன்றின் மீது ஓர் ஆபத்தான சாலை இருப்பதால், பல பேர் மரணம் மற்றும் காயம் அடைகின்றனர் என்பதைத் தெரிந்து கொண்டு, அங்கு அந்த மலை வழியாக ஒரு சுரங்கம் வெட்ட எண்ணினார். பகல் நேரங்களில் உணவுக்குப் பிச்சை எடுப்பதும், இரவு வேளையில் சுரங்கம் தோண்டுவதை வேலையாகவும் செய்து வந்தார். முப்பது ஆண்டுகள் ஆயிற்று, சுரங்கப்பாதை 2,280 அடி நீளம், 20 அடி உயரம் மற்றும் 30 அடி அகலம் ஆனது. வேலை முடிவதற்கு இரண்டு ஆண்டுகள் இருந்தன. அப்போது ஜென்கை, முன்னாளில் பணியாளாக வேலை செய்த அதிகாரியின் மகன், பழிவாங்கும் நோக்கத்தில், வாளுடன் ஜென்கையைத் தேடி வந்தான். ஏனென்றால், ஜென்கை, அந்த அதிகாரியின் மனைவியைக் காதலித்து, தன்னோடு கூட்டி வந்ததோடு பெருமளவான சொத்துக்களையும் அபகரித்து வந்தவர். ஜென்கையைப் பார்த்து ஆத்திரமடைந்த அவன் "நான் உன்னை என் கைகளால் கொல்ல வேண்டும்" என்று கூறினான். அப்போது ஜென்கை "நீ என்னைத் தாராளமாக கொல்லலாம், ஆனால் இந்த சுரங்கத்தை நான் முடித்ததும் நீ என்னைக் கொல்" என்று கூறினார். எனவே அவனும், அந்த நாளுக்காகக் காத்திருந்தான். பல மாதங்கள் கடந்தன. ஜென்கை மட்டும் சுரங்கப் பாதையைத் தோண்டிக் கொண்டிருந்தார். எதுவும் செய்யாமல் இருந்ததால், மிகவும் சோர்வடைந்த அதிகாரியின் மகனும் ஜென்கைக்கு உதவியாக சுரங்கம் தோண்ட ஆரம்பித்தான். ஓராண்டு காலம் ஆனதும், அவன் ஜென்கையின் வலிமையையும் தன்னம்பிக்கையையும் கண்டு வியந்தான். சுரங்கப்பாதையும் முடிந்தது. மக்களும் பாதுகாப்பாக அந்தச் சுரங்கத்தில் பயணித்தனர். "இப்போது என் தலையைத் துண்டி, என் வேலை முடிந்தது" என்று ஜென்கை கூறினார். "எப்படி நான் என் சொந்த ஆசிரியர் தலையைத் துண்டிக்க முடியும்?" என்று கண்களில் இருந்து கண்ணீர் வழியக் கேட்டான்" அவன். இந்தக் கதையை தன் சீடர்களிடம் கூறிய ஒரு ஜென்குரு, "திருடனாக இருந்து, திருந்தியபின், நல்லதை நினைத்தால், அவனுக்கு நல்லதே நடக்கும்" என்று சொன்னார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.