2016-08-27 15:36:00

ஒருவரையொருவர் இரக்கத்தோடு நடத்துவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம்


ஆக.27,2016. ஒருவரையொருவர் இரக்கத்தோடு நடத்தும் ஒரேயொரு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு, ஆண்டவரால் நாம் அனுப்பப்படுகிறோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இக்காலப் புறக்கணிப்புக் கலாச்சாரத்தில், வயதானவர், சிறார், சிறுபான்மை இனத்தவர் போன்றவர்கள் அச்சுறுத்தலாக நோக்கப்பட்டு, சாலையோரத்தில் ஒதுக்கப்படுகின்றனர் என்றும் கூறிய திருத்தந்தை, இத்தகைய சூழலிலே நாம் பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

கொலம்பியத் தலைநகர், பொகொத்தாவில் இச்சனிக்கிழமையன்று தொடங்கியுள்ள, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளுக்கான இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு கொண்டாட்டங்களுக்கு, அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

பாவிகளில் முதன்மையான பாவி நான், ஆயினும் கடவுள் எனக்கு இரங்கினார் என்று பவுலடிகளார் திமொத்தேயுவுக்கு எழுதிய திருமுகத்தில்(1திமொ.1,12-16) கூறியதை மையமாக வைத்து இச்செய்தியை வழங்கியுள்ள திருத்தந்தை, ஆண்டவர் தனக்கு இரக்கத்தைப் போதித்தார் அல்லது அதனைக் காட்டினார் என்று சொல்லாமல், தன்னை இரக்கத்தோடு நடத்தினார் என்று பவுலடிகளார் சொல்லியுள்ளார் என்று கூறினார்.

நம் மக்கள் ஏற்கனவே போதுமான துன்பங்களை அனுபவித்துள்ளனர், இவர்களை மேய்ப்பர்கள் இரக்கத்துடன் நடத்துமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இந்நிகழ்வு, ஒரு கூட்டமாகவோ, கருத்தரங்காகவோ இல்லை, ஆனால் இது நம்மீது ஆண்டவர் காட்டும் இரக்கத்தைக் கொண்டாடும் நிகழ்வு என்பதையும் நினைவுபடுத்தினார். 

அமெரிக்கக் கண்டத்தின் அனைத்து திருஅவைகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளும் இக்கொண்டாட்டங்கள், ஆகஸ்ட் 30, வருகிற செவ்வாயன்று நிறைவடையும்.

மேலும், “இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், புனிதத்தின் சக்திமிக்க அலை அமெரிக்கக் கண்டம் முழுவதையும் ஆக்ரமிப்பதாக!” என்பதே, இச்சனிக்கிழமையன்று திருத்தந்தையின் டுவிட்டரிலும் வெளியானது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.