2016-08-27 15:52:00

இத்தாலி-நிலநடுக்கத்தில் இறந்தவர்கள் அரச மரியாதையுடன் அடக்கம்


ஆக.27,2016. நம் நாட்டின் ஆலய மணிகள் சேதமடைந்துள்ளன, ஆயினும் அவை மீண்டும் ஒருநாள் ஒலிக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார், இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆஸ்கொலி பிசெனோ ஆயர் ஜொவான்னி எர்கொலே.

இத்தாலியின் மத்திய பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கங்களில் இறந்தவர்களில் நாற்பது பேருக்கு, இச்சனிக்கிழமையன்று, ஆஸ்கொலியில் அடக்கத் திருப்பலி நிறைவேற்றிய ஆயர் எர்கொலே அவர்கள் இவ்வாறு தனது மறையுரையில் கூறினார்.  

ஆஸ்கொலியில், அரச மரியாதையுடன் இடம்பெற்ற இந்த அடக்கச் சடங்கில், இத்தாலிய அரசுத் தலைவர் ஜெர்ஜோ மத்தரெல்லா, பிரதமர் மத்தேயு ரென்சி ஆகியோர் உட்பட, பல அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இச்சனிக்கிழமையன்று நாடு முழுவதும் துக்கமும் அனுசரிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 24, கடந்த புதன் அதிகாலை 3.36 மணிக்கு இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து இடம்பெற்றுள்ள நிலநடுக்கங்களில், ஏறத்தாழ 300 பேர் இறந்துள்ளனர் மற்றும் ஏறத்தாழ 400 பேர் காயமடைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இவர்களில் 40 பேர் அபாய நிலையில் உள்ளதாகவும், இதுவரை இறந்தவர்களாக உறுதிசெய்யப்பட்டவர்களில், 18 மாத குழந்தை, ஒன்பது வயது சிறுமி உட்பட 21 பேர் சிறார் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இத்தாலியில், 2009ம் ஆண்டில் நடந்த நிலநடுக்கத்தில் 300 பேர் இறந்தனர்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.