2016-08-26 16:43:00

வாடகைத் தாய்முறை புதிய மசோதா ஏற்றுக்கொள்ள முடியாதது


ஆக.26,2016. இந்தியாவில் வெளியாகியுள்ள வாடகைத் தாய்முறை பற்றிய புதிய மசோதா, மனிதக் கருவின் மாண்பை மதிக்கவில்லை எந்று சொல்லி, இந்த மசோதாவை, கத்தோலிக்க திருஅவையால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று, இந்திய தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள, வாடகைத் தாய்முறை புதிய மசோதா பற்றி, ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய, இந்திய மேற்குப் பகுதி ஆயர் பேரவையின் குடும்ப ஆணையத்தின் தலைவரும், மும்பை துணை ஆயருமான ஆயர் சாவியோ ஃபெர்னான்டஸ் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

தங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்ற நிலையிலுள்ள தம்பதியரின் வேதனைகளையும், துன்பங்களையும் கத்தோலிக்க திருஅவை, மிக நன்றாகவே அறிந்துள்ளது என்றும், இதற்கு வாடகைத் தாய்முறை நல்ல தீர்வு அல்ல என்றும் கூறினார் ஆயர் சாவியோ ஃபெர்னான்டஸ்.

இந்தியாவில் ஆயிரக்கணக்கான கைவிடப்பட்ட சிறார் உள்ளனர், இவர்களைத் தத்து எடுப்பது, நல்ல தீர்வாக அமையும் என்றும் கூறிய ஆயர், இச்சிறார்க்கு மறுக்கப்பட்ட அன்பு, மாண்பு மற்றும் மதிப்பை இதன் வழியாகக் கொடுக்கலாம் என்றும் கூறினார். 

குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள், திருமணமாகி ஐந்தாண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆகியோர் மட்டுமே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறலாம். அதுவும், நெருங்கிய உறவினர் மூலமாகவே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெறலாம் என்பதற்கு, இப்புதிய மசோதா வழி அமைக்கிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.