2016-08-26 16:12:00

துன்புறுவோருக்கு ஆறுதலளிக்க திருத்தந்தை வேண்டுகோள்


ஆக.26,2016. “துன்புறுவோருக்கு ஆறுதலளிப்பதன் வழியாக, நல்லதோர் உலகைக் கட்டியெழுப்புவதற்கு நம்மால் உதவ இயலும்” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இவ்வெள்ளியன்று வெளியாயின.

மத்திய இத்தாலியில் ஆகஸ்ட் 24, கடந்த புதன் அதிகாலை 3.36 மணிக்கு இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை முன்னிட்டு, பிரதமர் மத்தேயு ரென்சி அவர்கள், நாட்டில் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.

இவ்வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுடன், செபம் மற்றும் பிற வெளிப்படையான செயல்களால், தொடர்ந்து தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்து வருகிறார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு, வத்திக்கான் தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினரை ஏற்கனவே அனுப்பியுள்ளார் திருத்தந்தை. வத்திக்கான் மருத்துவர்களும், செவிலியரும் அப்பகுதிகளுக்குச் செல்வதற்குத் தயாராகி வருகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கத்தில் முழுவதும் தரைமட்டமாகியுள்ள அமாத்திரிச்சே நகரில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள வத்திக்கான் தீயணைப்புப் படையினர், ஓர் இளம் சிறுமியை, இடிபாடுகளிலிருந்து மீட்டுள்ளனர். ஆனால் அச்சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இதில் இறந்துள்ளனர். மேலும், இந்நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, திருத்தந்தை கொடுத்தனுப்பியுள்ள செபமாலைகள் மற்றும் புனிதப் படங்களை வழங்கி, ஆன்மீக உதவிகளையும் வத்திக்கான் பணியாளர்கள் ஆற்றி வருகின்றனர்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.