2016-08-26 16:35:00

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனது பணி ஓய்வு பற்றி


ஆக.26,2016. நலிவடைந்து வந்த உடல்நலம், கட்டாயமாக மேற்கொள்ள வேண்டியிருந்த வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணங்கள் ஆகியவை, திருத்தந்தையின் பணியிலிருந்து விலக வேண்டுமென்ற உணர்வை    தனக்கு ஏற்படுத்தியதாக, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ளார்.

Elio Guerriero என்ற இத்தாலிய பத்திரிகையாளர்க்கு அளித்த பேட்டியில் இவ்வாறு உரைத்துள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2012ம் ஆண்டில், மெக்சிகோ மற்றும் கியூபா திருத்தூதுப் பயணத்தை முடித்துத் திரும்பியபோது, மற்றுமொரு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள உடல் சக்தியற்று இருந்ததை உணர்ந்ததாகத் தெரிவித்தார்.

2013ம் ஆண்டில், உலக இளையோர் தினத்திற்கு, பிரேசிலுக்குத் தான் செல்லவேண்டியிருந்ததையும் குறிப்பிட்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், விசுவாச ஆண்டை முடித்தபோது தனது மனம் தயாராகி விட்டது என்றும் கூறினார்.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், உலக இளையோர் தினத்தை உருவாக்கியபோது, இதற்கு திருத்தந்தை செல்வது தவிர்க்க இயலாததாக இருந்தது என்றும் தனது பேட்டியில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

“இறைவன் மற்றும் மனித சமுதாயத்தின் பணியாள் 16ம் பெனடிக்ட் அவர்களின் வாழ்க்கை வரலாறு” என்ற தலைப்பில், Guerriero எழுதியுள்ள புத்தகத்திலிருந்து சில பகுதிகள், ஆகஸ்ட் 24ம் தேதி, La Repubblica என்ற தினத்தாளில் வெளியாயின. இப்புத்தகத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பேட்டியும் உள்ளது. 

தான் பாப்பிறை பணியிலிருந்து ஓய்வு பெறுவது, தனது கடமை என உணர்ந்ததாக, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் சொல்லியுள்ளார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.