2016-08-25 16:01:00

சிரியாமீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் அகற்றப்பட கிறிஸ்தவர்கள்


ஆக.25,2016. சிரியா நாட்டிற்கெதிராக விதிக்கப்பட்டுள்ள, பன்னாட்டுப் பொருளாதாரத் தடைகள், அப்பாவி குடிமக்களின் துன்பங்களை அதிகரித்துள்ளதால், அத்தடைகள் நீக்கப்படுமாறு, அந்நாட்டு மூன்று கிறிஸ்தவ முதுபெரும் தந்தையர் விண்ணப்பித்துள்ளனர்.

ஆசியச் செய்தி நிறுவனத்தின் வழியாக வெளியிடப்பட்டுள்ள இவ்விண்ணப்ப அறிக்கையில், மெல்கித்தே கத்தோலிக்க முதுபெரும் தந்தை மூன்றாம் லஹாம், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை 10ம் ஜான், சிரிய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை 2ம் இக்னேஷியஸ் எப்ரேம் ஆகிய மூவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

சிரியா அரசை தனிமைப்படுத்துவதற்காக இப்பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருந்தாலும், இத்தடைகளால், சிரியா மக்களின், குறிப்பாக, ஏழைகள் மற்றும் உழைக்கும் மக்களின் துன்பங்கள் அதிகரித்துள்ளன  என்று, அவ்வறிக்கை கூறுகிறது.

சிரியாவில், 2011ம் ஆண்டில் நெருக்கடிகள் தொடங்கியதிலிருந்து, அந்நாட்டிற்கெதிரான பொருளாதார மற்றும் நிதி சார்ந்த தடைகளின் பாதிப்பு, சிரியா குடிக்களின் அன்றாட வாழ்வுச் சுமைகளை அதிகரித்துள்ளன என்றும், அக்கிறிஸ்தவத் தலைவர்கள் கூறுகின்றனர்.

சிரியாவில், கடந்த 5 ஆண்டுகளில், குறைந்தது 2,90,000 பேர் இறந்துள்ளனர் மற்றும் இலட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்துள்ளனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.