2016-08-25 15:54:00

இக்காலத் திருஅவை தேர்ந்து தெளிதலில் வளர்தல் அவசியம்


ஆக.25,2016. இளம் அருள்பணியாளர்கள், தேர்ந்து தெளிதல் என்ற சிறந்த கலையில் வளர்வதற்குப் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போலந்து நாட்டில், இயேசு சபை அருள்பணியாளர்களிடம் கூறினார்.

போலந்து நாட்டின் கிரக்கோவில் கடந்த ஜூலை 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற்ற 31வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளின்போது, ஜூலை 30ம் தேதி, கிரக்கோவ் உயர்மறைமாவட்ட பேராயர் இல்லத்தில், 28 இயேசு சபை அருள்பணியாளர்களுடன் நாற்பது நிமிடங்கள் உரையாடினார் திருத்தந்தை.

அச்சமயத்தில் திருத்தந்தையிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு,  திருத்தந்தை அளித்த பதில்களின் தொகுப்பு, திருத்தந்தையின் அனுமதியுடன் இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.

பல குருத்துவக் கல்லூரிகளில் கிறிஸ்தவ வாழ்வு பற்றிய போதனைகளில், கண்டிப்பான சட்டங்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படுகின்றன என்றும், இம்மாணவர்கள் அருள்பணியாளர்களாக ஆனபிறகு, அவர்களின் வழிகாட்டுதல்களைத் தேடிவரும் மக்களுக்குப் பதில் சொல்வதற்கு, கடினமானதாக அல்லது இயலாததாக இப்போதனைகள் அவர்களை ஆக்குகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.

புனித இஞ்ஞாசியார் கற்றுக்கொடுத்த, செபம் மற்றும் கவனம் நிறைந்த தேர்ந்து தெளியும் கலையை, மறைமாவட்ட குருத்துவக் கல்லூரிகளுக்கும், மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கும் இயேசு சபையினர் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இன்றையத் திருஅவை, ஆன்மீகத் தேர்ந்து தெளிதலின் திறமையில் வளர்வது அவசியம் என்றுரைத்த திருத்தந்தை, குருத்துவ மாணவர்கள்,  அருள்பணியாளர்களாக, பல இளையோர்க்கும், வயது வந்தோர்க்கும் பணியாற்றும்போது, இன்னல்களை எதிர்கொள்கின்றனர், மக்கள் பலர் ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெற்ற பின்னர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர், இதற்கு அருள்பணியாளர்கள் மோசமானவர்கள் என்பது காரணமல்ல, ஆனால் சூழல்களைத் தேர்ந்து தெளியும் திறனற்றவர்களாக அவர்கள் உள்ளார்கள் என்பதே காரணம் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.