2016-08-24 17:06:00

வெடிகுண்டுகளும் கடும் சேதங்களை விளைவிக்கக் கூடியவை


ஆக.24,2016. அணு, வேதிய மற்றும் உயிரியல் ஆயுதங்கள் கொணரும் கடும் சேதங்களைப் போலவே, வெடிகுண்டு ஆயுதங்களும் ஏற்படுத்தும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் எச்சரித்தார்.

பெருமளவில் அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து, ஐ.நா.வில் நடைபெற்ற கூட்டத்தில், இச்செவ்வாயன்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள், இவ்வாறு எச்சரித்தார்.

போர்க்கால மற்றும் மனித சமுதாயத்திற்கெதிரான குற்றங்களைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் இந்தச் சக்திமிக்க வெடிகுண்டுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு, ஐ.நா. நிறுவனம் கவனம் செலுத்துமாறும் பரிந்துரைத்தார் பேராயர் அவுசா.

பள்ளிகளும், மருத்துவமனைகளும், குடிமக்களின் உள்கட்டமைப்புகளும், ஓய்வின்றி வீசப்படும் இந்த வெடிகுண்டுகளால், கடுமையாய்ப் பாதிக்கப்பட்டிருப்பதை நம் கண்களாலே பார்க்கின்றோம் என்றும், இந்த ஆயுதங்கள் ஏற்படுத்தும் மனிதாபிமானப் பேரிடர்கள் தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன என்றும் கூறினார் பேராயர் அவுசா.

எங்கள் நகரங்களும், சமூகங்களும், அணு, வேதிய மற்றும் உயிரியல் ஆயுதங்களால் அல்ல, ஆனால் சக்திமிக்க வெடிகுண்டுகளால் அழிக்கப்படுவதால், நாங்கள் கட்டாயமாக வெளியேறுகிறோம் என்ற முக்கிய செய்தியை, பல்லாயிரக்கணக்கான அகதிகளும், புலம்பெயர்ந்துள்ள மக்களும் ஐ.நா. அவைக்கு அனுப்புகின்றனர் என்றும் கூறினார் பேராயர் அவுசா.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.