2016-08-24 16:10:00

இரக்கத்தின் தூதர்கள் – அருளாளர் அன்னை தெரேசா பாகம் 12


ஆக.24,2016. அன்பு நெஞ்சங்களே, மௌனத்தின் கனி செபம், செபத்தின் கனி விசுவாசம், விசுவாசத்தின் கனி அன்பு. அன்பின் கனி சேவை. சேவையின் கனி அமைதி. இதுதான் அருளாளர் அன்னை தெரேசா அவர்கள் வாழ்வின் சாராம்சம். அன்னை அவர்களின் அன்புச் சேவையை அனுபவித்த பலர், தங்களை மெய்சிலிர்க்க வைத்த நிகழ்வுகளை, தாங்கள் சந்திக்கும் மனிதரிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர். இவற்றைக் கேட்கும்போது, அவை, நம் ஒவ்வொருவரின் இரக்கம் நிறைந்த பிறரன்பு சேவைக்கு உந்துசக்தியாக உள்ளன. கொல்கத்தாவில் அன்னை தெரேசா அவர்களால், அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குப் பாரமரிக்கப்படும் ஒருவர், தன்னை நெகிழவைத்த நிகழ்வு பற்றி இப்படிப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஒருநாள் இரவு தெருவோரத்தில் என்னைப்போன்று வறுமைப்பட்டவர்களுடன் உறங்கிக் கொண்டிருந்தேன். இல்லை, உறங்குவதுபோல் பாவனை செய்துகொண்டிருந்தேன் என்பதுதான் பொருந்தும். ஏனெனில், நடுங்கிய குளிரில், வெற்றுடம்போடு, எப்படித் தூக்கம் வரும்? அன்று இரவு மணி பன்னிரண்டைத் தாண்டியிருக்கும். அன்னை தெரேசா அவர்கள், அவசர மருத்துவ வாகனம் ஒன்றில், அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தார். எங்களைப் பார்த்தவுடன், வண்டியை நிறுத்தச் சொல்லி, கீழே இறங்கி வந்தார்கள். அவர்கள் முகத்தையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். வந்த வழியே திரும்பிச் சென்று விட்டார்கள். அரைமணி நேரம் கழித்து லாரி ஒன்று வந்து எங்கள் அருகில் நின்றது. வழக்கமாகத் தொல்லைதரும் காவல்துறையினர் என நினைத்து, என் கண்களை இறுக மூடிக்கொண்டேன். ஆனால், மிக மிக மிருதுவான விரல்கள் என்னத் தட்டி எழுப்பின. கண்விழித்துப் பார்த்தேன். சிரித்த முகத்துடன் அன்னை தெரேசா நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் கைகளில் குளிருக்கு இதமான முரட்டுப் போர்வை இருந்தது. அவருடன் வந்திருந்த சிலர், எல்லாருக்கும் போர்வைகள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் எதுவுமே நடக்காததுபோல் வந்த வழியே லாரியில் சென்றுவிட்டார்கள். அதை, “உறக்கம் பிடிக்காத அன்புச்சேவை” என்று மட்டும்தான் என்னால் சொல்ல முடியும். அன்னை தெரேசா அவர்கள், காளிகாட் இறப்போர் இல்லத்திற்கு வரும்பொழுதெல்லாம், ஒவ்வொருவருடனும் சிரித்துப் பேசுவார்கள். ஒவ்வொருவரது குறைகளையும் அக்கறையுடன் கேட்பார்கள்.  

காளிகாட் இல்லத்தில் பராமரிக்கப்பட்ட சென்னையைச் சார்ந்த அந்தோனி என்பவர் தனது அனுபவத்தைச் சொல்லியிருக்கிறார்.

நான் சென்னைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் சென்றேன். இங்கு எனக்கு திருமணமும் நடந்தது. ஐந்து பிள்ளைகளுக்கும் அப்பாவானேன். என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஊர்விட்டு ஊர் போய் கஷ்டப்பட்டு உழைத்து, கடைசியில், காச நோயாளி ஆகிவிட்டேன். எனக்கு காச நோய் வந்த பிறகு, என் வீட்டில் யாருமே என்னை சட்டை செய்யவில்லை. எனக்குப் பாசம் ஆயிரமே இருந்தாலும், நான் பாசம் வைத்திருந்த அவர்களே வேண்டாம் என்று சொன்ன பிறகு, அவர்களிடம் போகலாமா, எனவே வீட்டைவிட்டுக் கிளம்பி நாகப்பட்டிணம் சென்றேன். பணம்தான் உலகத்தின் உயிர்நாடி. பணத்தை வைத்துத்தான் மனிதரை மதிக்கிறார்கள். நீங்கள் என்ன ஆடை உடுத்தியிருக்கிறீர்கள், நீங்கள் என்ன வைத்துள்ளீர்கள்,  இவற்றை வைத்துத்தான் உலகம் உங்களை மதிக்கின்றது. இப்பொழுது என்னிடம் பணம் இருந்திருந்தால், என் குடும்பத்தார் என் நோயைப் பற்றிக் கவலைப்பட்டிருக்கவே மாட்டார்கள். கொஞ்ச நாள் நாகப்பட்டிணத்தில் இருந்துவிட்டு ஒருநாள் வீட்டுக்குப் போனேன். இங்க எதுக்கு வந்தா, நான்தான் வரவேண்டாம்னு சொன்னேனே என்று என் மனைவி எரிந்து விழுந்தாங்க. சரின்னு கிளம்பிட்டேன். சிறிது நாள்கள் சென்று, மீண்டும் வீட்டுக்குப் போனேன். வரமாட்டேன்னு வீரப்பா போனே, பின்னே ஏன் திரும்பி வந்தாய்ன்னு சொல்லி, கதவை அடைச்சுட்டாங்க. குடும்பத்தாரே மனதைக் கல்லாக்கி விட்டார்களே என்ற வேதனை மனதை அரித்தது. கல்கத்தாவுக்குப் போய் சாகலாம் என்று இங்கு வந்தேன். அன்னை தெரேசா சபையினர் என்னைக் காப்பாற்றி விட்டார்கள். காளிகாட் இல்லத்தில் ஆறு மாதமாக இருக்கிறேன். சொந்த இரத்தம் ஓடுகிற சகோதரன், பிள்ளைகள் ஆகிய இவர்களே விரட்டியடித்தார்கள். ஆனால், தந்தை தாயைவிட்டு, சொந்த சுகத்தையெல்லாம் மறந்துவிட்டு, எங்களுக்காகத் தியாகம் செய்யும் இச்சகோதரிகளைப் பற்றி என்ன சொல்வது. இப்பொழுது அன்னை தெரேசாவையே எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் எவ்வளவு செல்வத்தில் வாழலாம். ஆனால் ஏழைகள் நல்ல நிலையில் சாவதற்கு ஓர் இருப்பிடம் தேவை என்று, அவர்களுக்காகவே வாழ்கிறார்கள். இவர்களை யாருக்கு ஒப்பிடுவது? ஏழைகளைக் கவனிக்க யாருமே இல்லை என்று கடவுள் இவர்களை அனுப்பியிருக்கிறார் போலும்! என்று சொல்லி முடித்துக்கொண்டார் அந்தோனி. பின்னர், இவரே, அந்த காளிகாட் அன்னை தெரேசா இல்லத்தில் தங்கியிருக்கும் ஜார்ஜ் பிரான்சிஸ் என்ற மற்றொரு தமிழர் பற்றிச் சொன்னார். ஜார்ஜ் இப்படி சொல்லியிருக்கிறார்

கரக்பூரில் அண்ணன், அண்ணி எல்லாரும் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரைக்கும் அவர்கள் உயிருடன் இல்லை. நான் இராணுவத்தில் இருந்தேன். பின்னர் வாகனம் பழுதுபார்க்கும் தொழிற்சாலையில் வேலை செய்தேன். காச நோய் வந்தது. பின்னர், யாருமே சரியாகப் பேசுவதில்லை. அதனால் இந்த இல்லத்திற்கு வந்துவிட்டேன்.  

அந்த இல்லத்தில் பணிபுரியும் ஒரு பெண் இப்படிச் சொல்லியிருக்கிறார்.

நான் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தேன். கையில் காசு இல்லை. அன்னைதான் என்னை இங்கே சேர்த்தார்கள். நான் பிழைத்துக் கொண்டேன். என்னை நிராதரவாக, கேட்பதற்கு நாதியின்றி தவிக்கவிட்ட சமூகத்திடம் திரும்பிச் செல்லத் துளிகூட விருப்பமில்லை. இங்கேயே இருந்து என்னைப் போலவே புறக்கணிக்கப்பட்ட என்னுடைய ஏழைச் சகோதரிகளுக்கு உதவி செய்வதிலேயே இன்பம் கண்டேன். இவர்களுக்கும் யாருமே இல்லை. என்னை இவர்களோடு பிணைத்துக்கொள்வதுதான் எனக்குப் பிடித்திருக்கின்றது. சிலரது சீரழிந்த நிலை எனக்கு மிகவும் வேதனை தருகிறது. இவர்களின் கண்ணீரைத் துடைக்க அவர்களின் உறவுகளாக நான் இருக்கிறேன் என்ற எண்ணம் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது என்றார் அப்பெண்.

இப்படி, அன்னையவர்கள் இல்லத்தில் பராமரிக்கப்படும் ஒவ்வொருவரின் கதையும் ஒருவிதம். அன்பர்களே, கோவில்கள் இடிந்து போகலாம். பேரரசுகள் சரிந்து போகலாம். ஆனால், செறிவுடைய ஞான மொழிகள் நீடித்திருக்கும் என, எட்வர்ட் தார்ன்டைக் அவர்கள் சொன்னார். அன்னை தெரேசாவின் ஞான மொழிகளும், பிறர்நலப் பணிகளும் நிலையாக, நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அன்னை தெரேசா அவர்கள் சொன்னது போன்று, உதவும் கரங்கள், பிரார்த்திக்கும் உதடுகளைவிடச் சிறந்தவை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.