2016-08-24 16:20:00

இது இரக்கத்தின் காலம்.. – என் சீடர்களிடம் ஆன்மீக பலம் இல்லை


சுல்தான் ஒருவர், ஒரு ஞானியால் கவரப்பட்டு அடிக்கடி அவரைப் போய்ப் பார்த்து வந்தார். ஞானியின் போதனைகள் அவருக்கு மிகவும் பிடித்தது. எனவே அலுவல் பல இருந்தும் ஞானியிடம் அதிக நேரம் செலவழிப்பதை விரும்பினார். அவரிடம் திரண்ட சொத்துக்கள் இருந்தன. எனவே அவர் ஞானியிடம், ''நீங்கள் எது செய்யச் சொன்னாலும் நான் செய்யக் காத்திருக்கிறேன். உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள்,'' என்றார். ஞானி,''ஆம்,உன்னிடம் எனக்கு ஆக வேண்டியது ஒன்றிருக்கிறது. அதை மறுக்காமல் செய்வாயா?'' என்று கேட்டார். சுல்தானும் ஆவலுடன் என்னவென்று கேட்க, ''நீ மீண்டும் இங்கு வராதிருக்க வேண்டும்,''என்று ஞானி சொன்னார். சுல்தானுக்கு அதிர்ச்சி,திகைப்பு,ஏமாற்றம்,வருத்தம் எல்லாம் ஒரு சேர ஏற்பட்டது. சுல்தான் மிகுந்த பணிவுடன், ''தங்கள் மனம் வருந்தும்படி நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா? அப்படி ஏதாவது செய்தாலும் அதற்கு இது பெருந்தண்டனை அல்லவா? நீங்கள் என்னை மன்னிக்கக் கூடாதா?'' என்று புலம்பினார். ஞானி சொன்னார், ''அப்பா, இதில் உன் தவறு ஏதும் இல்லை. தவறு என் சீடர்களிடம்தான். இதுவரை அவர்கள் கடவுளை நினைத்து பிரார்த்தனை செய்தார்கள், பாடினார்கள், ஆடினார்கள். அவர்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதிருந்தது. இப்போது நீ எதுவேண்டுமானாலும் தருவதாகச் சொன்னவுடன் அவர்கள் மனம், உன்னை எப்படிப் பாராட்டி, கவர்ந்து உன்னிடம் பரிசுகள் வாங்கலாம் என்று அலைமோத ஆரம்பித்து விட்டது. உன்னை எதிர்கொள்ளும் அளவுக்கு என் சீடர்களிடம் ஆன்மீக பலம் இல்லை.'' என்று.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.