2016-08-23 15:43:00

மியான்மார் சீர்திருத்தங்கள்மீது, மேற்குக்கு பொறுமை அவசியம்


ஆக.23,2016. பல ஆண்டுகளாக இராணுவம் ஆட்சி செய்துவந்த தென்கிழக்கு ஆசிய நாடாகிய மியான்மாரிலுள்ள பிரச்சனைகளுக்கு, ஒரே இரவில் தீர்வுகள் காண்பது இயலாத காரியம் என்று, அந்நாட்டுத் தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

கனடா நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இவ்வாறு கூறிய, மியான்மாரின் முதல் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள்,    மியான்மாரில் நிலவும் பிரச்சனைகளுக்கு, உடனடியாகத் தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என, மேற்கத்திய நாடுகள் எதிர்பார்க்கக் கூடாது என்று கூறினார்.

மேற்கத்திய நாடுகள், மியான்மாரில் இடம்பெறும் சீர்திருத்த நடவடிக்கைகளை, பொறுமையோடு அணுக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் கர்தினால் போ.

சிலநேரங்களில், மேற்கத்திய நாடுகள், பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வுகள் காணப்பட வேண்டுமென எதிர்பார்க்கின்றன என்றுரைத்த கர்தினால் போ அவர்கள், நாடு எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, அரசு அதிகாரிகள் மிகவும் முனைப்புடன் முயற்சி செய்கின்றனர் என்றார்.

மியான்மாரில், 2011ம் ஆண்டில் சனநாயக அரசு ஆட்சிக்கு வந்ததையடுத்து, அந்நாட்டில் ஐம்பதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது.

ஆதாரம் :  UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.