2016-08-23 15:54:00

பிலிப்பைன்ஸில் அநீதியான வன்முறை நிறுத்தப்படுமாறு ஆயர்கள்


ஆக.23,2016. பிலிப்பைன்ஸ் நாட்டில், மறைமுகமாக இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக, அந்நாட்டு அரசுத்தலைவர் Rodrigo Duterte அவர்கள் கடுமையான போர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவேளை, அந்நாட்டில் இடம்பெறும் அநீதியான வன்முறை நிறுத்தப்படுமாறு ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் அதனோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், அத்தகைய மனிதர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது, அவர்கள் சுடப்பட்டு கொலை செய்யப்படுவதாக, ஆயர்கள் அண்மையில் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

இவர்கள் பற்றி குற்ற அறிக்கை சமர்ப்பிக்கும், கண்காணிப்புக் குழுவின் நடவடிக்கையும், ஊடகங்களில் வெளியாகும் கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருவது கவலை தருவதாக, பிலிப்பைன்ஸ் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.  

நாட்டில், சட்டம் ஒழுங்கு காக்கப்படுவதற்கான முயற்சிகளை ஊக்குவித்துள்ள ஆயர்கள், நீதி காக்கப்படவும் அழைப்பு விடுத்துள்ளனர். 

பிலிப்பைன்ஸில், சட்டத்திற்குப் புறம்பேயான போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்கும் முயற்சியில், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று அரசுத்தலைவர் கடந்த மே மாதத்தில் அறிவித்தார். அதற்குப் பின்னர், 6 இலட்சத்திற்கு மேற்பட்டோர் காவல்துறையில் சரணடைந்துள்ளனர்.

ஆயினும், கடந்த ஏழு வாரங்களில், 1,900க்கும் மேற்பட்ட மக்கள், காவல்துறை அல்லது கண்காணிப்புக் குழுவால் கொல்லப்பட்டுள்ளனர் என்று, பிலிப்பைன்ஸ் காவல்துறை, இச்செவ்வாயன்று கூறியதாக, ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் :  CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.