2016-08-23 15:50:00

Panglong கருத்தரங்கு சிறார்க்கு அமைதியைக் கொண்டுவரும்


ஆக.23,2016. மியான்மாரில் இம்மாதம் 31ம் தேதி நடைபெறவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதிக் கருத்தரங்கு, சிறார்க்கு அமைதியைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளது ஒரு பல்சமயக் குழு.

புத்த, கிறிஸ்தவ, இந்து மற்றும் முஸ்லிம் மதத்தவரைக் கொண்ட, சிறார்க்கான பல்சமயக் குழு, மியான்மாரில் நடைபெறவிருக்கும், 21ம் நூற்றாண்டு Panglong கருத்தரங்கு, அந்நாட்டின் நலன் குறித்து, சிறப்பாக, அந்நாட்டின் வருங்காலமாகிய சிறார் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.

மியான்மார் இராணுவத்திற்கும், தன்னாட்சி கேட்டுப் போராடும் இனக் குழுக்களின் ஆயுதப் பிரிவுகளுக்கும் இடையே, கடந்த எழுபது ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் சண்டையில், சிறாரே அதிகம் துன்பத்துக்குள்ளாகியுள்ளனர் என்றும், அக்குழு கூறியது.

யூனிசெப் மற்றும், மியான்மாரின் Ratana Metta என்ற ஓர் அரசு-சாரா நிறுவனத்தினால், 2014ம் ஆண்டில், இந்தப் பல்சமயக் குழு உருவாக்கப்பட்டது.

மதங்களின் பிரதிநிதிகள், அரசு உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தினர், ஐ.நா. அதிகாரிகள் என 200 பேர், கடந்த ஞாயிறன்று, தலைநகர் யாங்கூனில் நடத்திய கூட்டத்தின் இறுதியில், இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

1947ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி, மியான்மார் நாடு உருவானதற்குப் பின்னர் நடைபெறும் மிக முக்கியமான அமைதிக் கருத்தரங்காக,  இம்மாதம் 31ம் தேதிக் கருத்தரங்கு நோக்கப்படுகிறது.  

மியான்மாரிலுள்ள 135க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் மத்தியில், பதட்டநிலைகளைக் குறைக்கும் நோக்கத்தில் இக்கருத்தரங்கை அரசு ஏற்பாடு செய்துள்ளது எனச் சொல்லப்படுகிறது.

ஆதாரம் :  AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.