2016-08-22 16:50:00

தற்பெருமையை கைவிட்டு, தாழ்ச்சியுடன் குறுகிய வாசலில் நுழைவோம்


ஆக.,22,2016.  பாவிகளாகிய நாம், இறைவனின் மன்னிப்பு நமக்கு தேவை என்பதை உணர்ந்தவர்களாக, நம் தற்பெருமைகளையும் அச்சத்தையும் சுருக்கி, கட்டுப்படுத்திச் செல்லவேண்டும் என்பதற்காகவே குறுகிய வாயில் வழியாக நுழைய இறைவன் கேட்கிறார் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை.

ஒடுக்கமான பாதை வழியே நுழைவோர் குறித்த இஞ்ஞாயிறு வாசகம் பற்றி மூவேளை செப உரையின்போது தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறை இரக்கம் எனும் கதவு அனைவருக்கும் எவ்வித பாகுபாடுமின்றி எப்போதும் திறந்தே இருக்கிறது என்று கூறினார்.

இரக்கத்தின் வழியே மீட்பு என்ற மையக் கருத்தை வலியுறுத்தி உரை நிகழ்த்திய திருத்தந்தை, குறுகலான கதவு வழியே நுழையும்படி இயேசு நம்மை அழைப்பதைச் சுட்டிக்காட்டினார்.

எத்தனை பேர் மீட்படைந்தார்கள் என்ற எண்ணிக்கையைப் பற்றி இயேசு இங்கு பேசவில்லை, மாறாக, அத்தனை பேருக்கும் மீட்பின் பாதை தெரிந்திருக்க வேண்டும் என்பது குறித்தே அவர் எடுத்துரைக்கிறார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவில் முழு நம்பிக்கைக் கொண்டு, அவரை நோக்கி, தாழ்ச்சியுடன் செல்வதன் அவசியத்தைக் குறிக்கவே, குறுகிய வாயில் பற்றி இயேசு பேசுகின்றார் என்றார்.

நாம் எவ்வளவு பெரிய பாவிகளாக இருந்தாலும், நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ள, இயேசு எப்போதும் காத்திருக்கிறார்; அவராலேயே நம் மனங்களை மாற்றியமைக்கவும், நம் வாழ்வுக்கு முழு அர்த்தம் கொடுக்கவும் இயலும் எனவும் தன் மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு எனும் வாயிலை, அதாவது விசுவாசத்தின் வாயிலை நாம் அடையும்போது நம் சுயநலப் போக்குகளையும், தவறான நடவடிக்கைகளையும், மனதை பிறருக்கு மூடும் நிலைகளையும் விட்டு வெளியேறி, அவற்றை பின்னுக்கு விட்டுவிட்டு வாயிலில் நுழைகிறோம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த வாயிலில் நுழைவதிலிருந்து நம்மைத் தடுக்கும் அனைத்து நிலைகள் குறித்து ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்ப்போம் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.