2016-08-22 16:33:00

இத்தாலிய திருவழிபாட்டு வாரத்திற்கு வாழ்த்துச் செய்தி


ஆக.,22,2016.  இத்தாலிய திரு அவையால் நடத்தப்படும் 67வது தேசிய திருவழிபாட்டு வாரத்திற்கு தன் வாழ்த்துக்களையும் செபத்தையும் வெளியிட்டு தந்திச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின் அவர்களால் அனுப்பப்பட்டுள்ள இத்தந்திச் செய்தியில், இத்தாலிய திருவழிபாடு வாரத்திற்கென தெரிவு செய்யப்பட்டுள்ள தலைப்பான 'இரக்கத்தின் இருப்பிடமாக திருவழிபாடு' என்பது குறித்த முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இத்தாலியின் உம்பிரியா மாவட்டத்தின் கூபியோ எனுமிடத்தில் இடம்பெறவிருக்கும் 67வது தேசிய திருவழிபாட்டு வாரக் கொண்டாட்டங்கள், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் பெறும் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இயேசுவின் ஒவ்வொரு வாழ்வு நிகழ்வும், இரக்கத்தைக் குறித்தே பேசும் நிலையில், ஒவ்வொரு திருவழிபாட்டு நிகழ்வையும் இயேசுவில் நம் பார்வையை ஊன்றியவர்களாக சிறப்பிக்க வேண்டியது முக்கியத்துவம் பெறுகிறது என திருத்தந்தையின் செய்தி, இத்தாலிய ஆயர்களிடம் விண்ணப்பிக்கிறது.

இரக்கத்தின் கொடை என்பது சிறப்பான விதத்தில், தவம் மற்றும் ஒப்புரவு அருளடையாளத்தில் ஒளிர்கிறது என்பதையும் எடுத்தியம்பி, இரக்கச் செயல்களின் அவசியத்தையும் வலியுற்றுத்தியுள்ளது, திருத்தந்தையின் பெயரால் கர்தினால் பரோலின், இத்தாலிய ஆயர்களுக்கு அனுப்பியுள்ளச் செய்தி.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.