2016-08-20 15:28:00

பொதுக்காலம் - 21ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


ஆகஸ்ட் 21, இஞ்ஞாயிறு, பிரேசில் நாட்டு, ரியோ நகரில், ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நிறைவடைகின்றன. இவ்விளையாட்டுக்கள் துவங்கியதிலிருந்து, பல கோடி இந்தியர்களின் உள்ளங்களில் தீயென சுட்டெரித்த ஒரு கேள்வி... நாம் எப்போது ஒரு பதக்கமாவது பெறுவோம் என்ற கேள்வி. நம் வேதனைக் கேள்விக்கு விடையாக, பதக்கங்கள் பெற்றுள்ளனர், சாக்க்ஷி மாலிக், பி.வி.சிந்து என்ற இரு இளம்பெண்கள். அதற்கு முன்னதாக, தீபா கர்மாக்கர் என்ற இளம்பெண், பதக்கம் வெல்லவில்லை என்றாலும், ‘ஜிம்னாஸ்டிக்’ பந்தயத்தில் மக்கள் மனங்களை வென்றார். பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்காக, உலக சமுதாயத்திற்கு முன், தலைகுனிந்து, கண்ணீர் வடித்து வடித்து நிற்கும் இந்திய அன்னை, இந்த மூன்று இளம் பெண்களால் தலை நிமிர்ந்து நிற்கிறார். இந்திய நாட்டின் பெருமையை உயர்த்திப்பிடித்த இந்த மூன்று இளம்பெண்களுக்கும் நம் நன்றி கலந்த வணக்கங்கள்!

120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ள ஒரு நாட்டில், விளையாட்டுத் திறமைகளில் இவ்வளவு பஞ்சமா என்ற வேதனைக் கேள்வி, நம்மை வாட்டி வதைக்கிறது. இதற்கு, பல காரணங்களை நாம் கண்டுபிடிக்கலாம். ஆனால், நம் அனைவருக்கும் தெரிந்த வெட்டவெளிச்சமான உண்மை, இந்தியாவை, தன் அரக்கப்பிடியில் வைத்திருக்கும் ஊழல். அங்கு ஆரம்பித்து, ஆயிரமாயிரம் காரணங்களைக் கண்டுபிடித்து, நம் உள்ளங்களைப் இரணமாக்கிக் கொள்வதற்குப் பதில், ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பக்கம் பொதுவாக நம் கவனத்தைத் திருப்புவோம். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த விளையாட்டுக்களை மையப்படுத்தி, சில வாழ்வுப் பாடங்களைப் பயில முயல்வோம்.

ரியோவில் நிறைவடைவது, ஒலிம்பிக் விளையாட்டுக்களா? ஒலிம்பிக் போட்டிகளா? இப்படி ஒரு கேள்வியை எழுப்புவது, வேடிக்கையாகத் தெரியலாம். ஆனால், என்னைப் பொருத்தவரை, இது சிந்திக்கவேண்டிய கேள்வி. ஒலிம்பிக்கைப்பற்றி மட்டுமல்ல, வாழ்வைப் பற்றியும் நாம் கொண்டுள்ள கண்ணோட்டத்தை நிர்ணயிக்கும் கேள்வி இது.

ரியோவில் நிறைவடைவது, ஒலிம்பிக் விளையாட்டுக்களா? ஒலிம்பிக் போட்டிகளா? ஆங்கிலத்தில் நாம் Olympic Games என்ற சொற்களைப் பயன்படுத்துகிறோம். Olympic Competitions என்ற சொற்களைப் பயன்படுத்துவதில்லை. தமிழிலோ, பெரும்பாலான நேரம், நாம் ஒலிம்பிக் போட்டிகள் என்றே குறிப்பிடுகிறோம். வெகு சிலரே, இதை, ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என்று குறிப்பிடுவர். விளையாட்டு, போட்டி என்ற இரு வார்த்தைகளுக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன.

ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முடிந்த கையோடு, விரைவில், செப்டம்பர் 7ம் தேதி, ரியோவில், மாற்றுத் திறனாளிகளின் பாராலிம்பிக் (Paralympics) விளையாட்டுக்கள் துவங்குகின்றன. உடலிலும், மனதிலும் முழு வளர்ச்சி பெற்றவர்கள் என்று கருதப்படும் மனிதர்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் விளையாட்டுக்களின்போது, பெரும்பாலும், பதட்டம், மன அழுத்தம், கோபம், சிலவேளைகளில் வெறி போன்ற உணர்வுகள் தலைதூக்கும். பாராலிம்பிக் விளையாட்டுக்களிலோ, எத்தனையோ முறை, மனதை உயர்த்தும் மென்மையான உணர்வுகள் வெளிப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஒலிம்பிக் விளையாட்டுக்களில், போட்டி என்ற எண்ணம் ஆக்ரமிப்பதால், வெற்றிபெறுவது ஒன்றே வாழ்வின் இலக்கு என்ற தவறான பாடம் வலியுறுத்தப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் விளையாடும்போது, பல நேரங்களில், அவர்கள் பங்கேற்றதையே ஒரு நிறைவாகக் கருதுவதை காணமுடிகிறது. இதுதான், விளையாட்டுக்களுக்கும், போட்டிகளுக்கும் இடையே உள்ள ஒரு பெரும் வேறுபாடு.

19ம் நாற்றாண்டின் இறுதியில், ஒலிம்பிக் விளையாட்டுக்களை மீண்டும் உயிர்பெறச் செய்தவர்களில் ஒருவராகிய Pierre de Coubertin அவர்கள் கூறிய சொற்கள், ஒவ்வொரு ஒலிம்பிக் விளையாட்டுக்களின்போதும் நினைவுகூரப்படுகின்றன. “வெற்றிபெறுவதல்ல, பங்கேற்பதே ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முக்கியம். வாழ்விலும், வெற்றிபெறுவது அல்ல, தகுந்த முறையில் போராடுவதே, மிக அவசியம்.” இந்த வார்த்தைகளின் உண்மைப் பொருள், ஒலிம்பிக்கைவிட, பாராலிம்பிக் விளையாட்டுக்களில் அதிகம் வெளிப்படுகின்றன என்பதை மறுக்க இயலாது..

போட்டிக்கும், விளையாட்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள, ரியோ ஒலிம்பிக் விளையாட்டுத் திடலில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு உதவும். Nikki Hamblin என்ற நியூஸிலாந்து பெண்ணும், Abbey D'Agostino என்ற அமெரிக்க பெண்ணும் 5000 மீட்டர் தேர்வுப் பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது, ஒருவர் மீது ஒருவர் இடித்து, தடுமாறி வீழ்ந்தனர். போட்டி என்ற வெறியில் அவர்கள் ஓடியிருந்தால், இந்த விபத்து நிகழ்ந்ததற்கு, ஒருவர், ஒருவரைக் குற்றம் சாட்டியிருப்பர். ஆனால், அவ்விரு பெண்களும் ஒருவருக்கொருவர் உதவி செய்து, பந்தயத்தை முடித்தனர். முடிவுக் கோட்டைத் தாண்டிய இருவரும், ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டபோது, விளையாட்டு அரங்கம் கரவொலியால் நிறைந்தது. அவ்விருவரும் அந்தப் பந்தயத்தில் வெல்ல முடியவில்லை. ஆனால், அரங்கத்தில் இருந்த ஆயிரமாயிரம் பார்வையாளர்கள், மற்றும் ஊடகங்கள் வழியே பல கோடி மக்கள் அனைவரின் உள்ளங்களையும் அவர்கள் வென்றனர்.

இதைக்குறித்து பேட்டியளித்த Nikki அவர்கள், "நான் ஒரு பதக்கம் வென்றிருந்தால், அது எவ்வளவு காலம் மக்கள் மனங்களில் பதிந்திருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், இன்னும் 20 ஆண்டுகள் சென்றபின், இந்த நிகழ்வை நான் மீண்டும் திரும்பிப் பார்க்கும்போது, அது எனக்கு மனநிறைவைத் தரும். அது நிச்சயம்" என்று கூறினார். இதையொத்த பல நிகழ்வுகள், பாராலிம்பிக் விளையாட்டுக்களில் அடிக்கடி நிகழ்ந்துள்ளன.

வாழ்க்கைப் பாதையில் நாம் போட்டிப் போட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், நம்மைத் தடுமாறி விழச் செய்வதற்கு பலர் இருக்கலாம். ஆனால், நாம் கீழே விழுந்துகிடக்கும் வேளையில், நம்மைக் கைதூக்கிவிட்டு, நமது இலக்கை அடைவதற்கு உதவி செய்பவர்கள், உன்னத மனிதப்பிறவிகள்! இவர்கள், வாழ்க்கையை ஒரு போட்டியாகப் பார்க்காமல், அனைவரும் பங்கேற்கும் ஓர் ஆனந்த விளையாட்டாகப் பார்க்கின்றனர் என்பது உறுதி.

ஒலிம்பிக் விளையாட்டுக்களின் சிகரமாக பதக்கங்கள் தரப்படுவது உண்மைதான். ஆனால், அவை மட்டுமே அங்கு நிகழ்ந்தால், அது மனிதர்கள் பங்கேற்கும் ஒரு உலக அனுபவமாக இருக்காது. இந்த விளையாட்டுக்களை மேம்படுத்துவது, Abbey, Nikki போன்றோரின் நிகழ்வுகள்.

தங்கம், வெள்ளி என்ற ஒப்புமைகளைப் பெரிதுபடுத்தி, போட்டி என்ற உணர்வை மட்டுமே கொண்டாடும் சூழலில், மறைவானப் பகைமை உணர்வுகள் வெளியாகும். ஊக்க மருந்துகள் என்ற குறுக்கு வழிகளும் திறக்கப்படும். ஆனால், வீரர்கள் ஒருவரை ஒருவருடன் போராடுவதை ஒரு விளையாட்டாகப் பார்க்கும்போது, உண்மையான திறமைகளைப் பாராட்டும் மனம் வெளிப்படும். இதனை, இளம்பெண் பி.வி.சிந்துவின் பெற்றோரிடம் – முன்னாள் வாலிபால் வீர்ர்களான, பி.வி.இரமணா, பி.விஜயா, - நாம் காண்கிறோம். தங்கள் மகள் சிந்து, உலகின் முன்னணி வீரரான காரோலீனா மரீனிடம் போராடித் தோற்றார், வெள்ளியைப் பெற்றார் என்பதை பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெற்றோர், தங்கப் பதக்கம் பெற்ற காரோலீனா மிக நன்றாக விளையாடினார், அவர் தங்கம் வெல்வதற்குத் தகுதியுடையவர்தான் என்று மனதாரப் புகழ்ந்தனர். இத்தகைய எண்ணங்கள் வெளிப்படும்போது, நாம் காண்பது உண்மையிலேயே ஒருவரை ஒருவர் மதிக்கும் உயர்ந்ததொரு விளையாட்டு, ஒருவரை ஒருவர் மிதிக்கும் போட்டியல்ல என்பதை உணர்ந்து மனம் குளிர்கிறது.

விளையாடுவதும், போட்டியிடுவதும் இரு வேறு உலகங்கள், பல நேரங்களில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட உலகங்கள் என்பதை, மீண்டும் ஓர் ஒலிம்பிக் நிகழ்வின் மூலம் புரிந்துகொள்ள முயல்வோம். 2008ம் ஆண்டு, பெய்ஜிங் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கேற்ற Shawn Johnson என்ற இளம்பெண் பகிர்ந்துகொள்ளும் அனுபவம் இது.

Shawnம் அவரது நெருங்கியத் தோழி Nastia Liukinம் சிறுவயது முதல், ஜிம்னாஸ்டிக் சாகசங்களை, இணைந்து பயின்றவர்கள். ஜிம்னாஸ்டிக்கில் நான்கு பிரிவுகளைக் கொண்ட ஒட்டுமொத்த போட்டியில் Shawnதான் தங்கம் வெல்வார் என்பது, அனைவரின் எதிர்பார்ப்பு. இந்த நான்கு பிரிவுகளில், மூன்று பிரிவுகள் முடிந்ததும், தான் பெற்றிருந்த புள்ளிகளைப் பார்த்தார் Shawn. அவருக்கும், Nastiaவுக்கும் இடையே அதிக வேறுபாடு இருந்தது. 4வது பிரிவில் தான் முழுமையாக 10 புள்ளிகள் பெற்றாலும், Nastiaவை வென்று, தங்கம் வெல்லமுடியாது என்பது Shawnக்குத் தெளிவானது. அப்போது அவர் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளலாமா? என்ற எண்ணங்களுடன் போராடினார்.

போராட்ட மேகங்கள் திரளும்போது, மின்னலைப்போல் நல்லெண்ணங்களும் தோன்றுமல்லவா? அதுபோல், Shawn மனதில் ஒளியொன்று தோன்றியது. அந்த ஒளியில் அவர் உணர்ந்த உண்மைகளைத் தன் சுயசரிதையில் அவர் இவ்வாறு எழுதியுள்ளார்: "தங்கம் கைநழுவிச் சென்றுவிட்டது என்பதை நான் உணர்ந்து ஏற்றுக் கொண்டபோது, நான் அதுவரை அனுபவித்திராத ஓர் அமைதி என்னுள் நிறைந்தது. மீதம் உள்ள அந்த ஒரு பிரிவு விளையாட்டில், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் கலந்துகொள்ளப் போகிறேன். மூன்று வயதுமுதல் நான் விரும்பிச் செய்த ஜிம்னாஸ்டிக் அசைவுகளை, மீண்டும் ஒரு குழந்தையைப்போல், யாருடனும் போட்டி போடாமல், என் மகிழ்வுக்காகச் செய்யப் போகிறேன். இவ்விதம், நான் உள்ளார்ந்த மகிழ்வோடு விளையாடினால், என்னென்ன சாகசங்கள் செய்யமுடியும் என்பதை இவ்வுலகம் பார்க்கட்டும்" என்று, Shawn தனக்குத் தானே சொல்லிக்கொண்டார்.

அந்த இறுதிப் பிரிவில் அவர் செய்த சாகசங்கள், பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தின. முடிவில், அவரது தோழி Nastia, தங்கத்தையும், Shawn, வெள்ளியையும் வென்றனர். பதக்கம் பெற்றதும் அவர்களைப் பத்திரிகை நிருபர்கள் சூழ்ந்தனர். வெள்ளியை வென்றது உங்களுக்கு எவ்வளவு மகிழ்வைத் தந்தது என்று ஒருவரும் Shawnஇடம் கேட்கவில்லை, மாறாக, தங்கத்தை நீங்கள் வெல்லவில்லையே, அது உங்களை எவ்வளவு பாதித்துள்ளது என்ற கேள்வியால் அவரைத் துளைத்தனர். வெள்ளி வென்றதில் அவர் அடைந்த மகிழ்வு, நிருபர்களின் கேள்விகளால் மறைந்தது. இருந்தாலும், அவர் அன்று கற்றுக்கொண்ட பாடம் அவரைப் பெரிதும் புடமிட்டது என்று தன் சுயசரிதையில் எழுதியுள்ளார்.

அந்தப் பாடம் என்ன? “மற்றவர்களின் எதிர்பார்ப்புக்கள், கணிப்புகள் என் மகிழ்வை, என் வாழ்வைத் தீர்மானிக்கவிடக் கூடாது. தங்கம் வெல்வது மட்டுமே வெற்றி; வெள்ளி வெல்வது தோல்வி என்பது நிருபர்களின் கருத்து. அது என் கருத்தல்ல. ஆனந்தமாக, ஆத்மார்த்தமாக விளையாடி, வெள்ளியை வெல்வதும் உண்மையிலேயே வெற்றிதான் என்பது என் கருத்து. பலகோடி இளையோர் அடையமுடியாத ஒரு சிகரத்தை, நான் அடைந்தது, நிறைவான ஒரு வெற்றிதான்” என்று தனக்குத்தானே அந்நேரத்தில் சொல்லித்தந்த பாடம், தன்னைக் காத்தது என்று, Shawn தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். அவர் எழுதியுள்ள சுயசரிதையின் தலைப்பு: “Winning Balance”, அதாவது, "சமநிலையை வெல்வது".

தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று பதக்கங்களை வெல்வதற்கு உடலைப் பயிற்றுவிக்கலாம். ஆனால், உள்ளுக்குள் 'சமநிலையை வெல்வதற்கு' மனதை நாம் பயிற்றுவிக்கவேண்டும். பெரும்பாலான நேரங்களில் இந்த சமநிலையை, இந்த ஆழமான அமைதியை வென்றவர்களுக்கு பந்தயங்களை வெல்வதும் எளிதாகும்.

இத்தகையைச் சமநிலையை வெல்வது, அனைவரும் விரும்பி, தெரிவு செய்யும் எளிதான வழி அல்ல. இது மிகவும் குறுகிய வழி. ஒரு சிலரே இத்தகைய வழியைத் தெரிவு செய்வர். போட்டிகளில் இறுதி இடத்தைப் பிடித்தாலும், நல்லவிதமாக வாழ்வுப் பந்தயத்தில் கலந்துகொண்டோம் என்ற திருப்தியில் வாழ்பவர்கள் இவர்கள். உலகின் கண்களில் கடைசியானோர் போல் தெரிந்தாலும், இவர்கள் முதன்மையான, உன்னதமான இடத்தை இறையரசில் பெறுவர். இதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் ஒரு வாழ்வுப் பாடமாக நமக்கு வழங்கியுள்ளார்:

லூக்கா நற்செய்தி 13 : 24,29,30

"இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும்.... இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.... ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்."

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.