2016-08-20 15:28:00

சிரியாவின் கொடூரங்களுக்கு, சிறாரின் கண்களே கண்ணாடி


ஆக.20,2016. சிரியாவில் இடம்பெறும் கொடூரங்களை, சிறாரின் கண்களிலிருந்தே தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம் என்று, தமாஸ்கஸ் திருப்பீடத் தூதர் பேராயர் மாரியோ செனாரி அவர்கள் கூறினார்.

சிரியாவில் வன்முறை, அண்மை வாரங்களில், உச்ச கட்டத்திற்குச் சென்றுள்ளது என்றும், ஐந்தரை ஆண்டுகளாக சண்டை இடம்பெறும் இந்த அரபு நாட்டில், இது, நிலைமையை மேலும் மோசமடையச் செய்து வருகின்றது என்றும் கூறினார் பேராயர் செனாரி.

சிரியாவில், வன்முறை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், அதற்கு மாறான சூழலையே தற்போது காண முடிகின்றது என்று, ஆசியச் செய்தியிடம் தெரிவித்துள்ளார் பேராயர் செனாரி.

இதற்கிடையே, 2002ம் ஆண்டுக்கும், 2015ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், உலக அளவில், குறைந்தது 4,900 தீவிரவாதத் தாக்குதல்களும், 11 ஆயிரம் கடத்தல்களும், 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளன என்று ஒரு புள்ளி விபரம் அறிவிக்கின்றது.  

இத்தாக்குதல்கள், ஐ.எஸ். இஸ்லாமிய அரசால் தூண்டப்பட்டவை அல்லது அவ்வரசோடு தொடர்புடையதாக வெளிப்படையாக அறிவிக்கப்பட்டவை எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.