2016-08-20 15:10:00

ஓர் ஆயரின் வாழ்வை மாற்றிய அன்னை தெரேசா


ஆக.20,2016. பாகிஸ்தானில், முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அன்னை தெரேசா அவர்கள் மீது, எப்போதும் நன்மதிப்பு கொண்டிருக்கின்றனர் என்று, அந்நாட்டின் ஃபாய்சலாபாத் ஆயர் ஜோசப் அர்ஷத் அவர்கள் கூறினார்.

தான் குருத்துவ மாணவராக இருந்தபோது, அன்னை தெரேசா அவர்களைச் சந்தித்தது பற்றி ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்ட ஆயர் அர்ஷத் அவர்கள், எங்களுக்கு அருள்பணியாளர்கள் மட்டும் தேவையில்லை, ஆனால், நல்ல  அருள்பணியாளர்கள் தேவை என்று, அன்னையவர்கள் தன்னிடம் கூறியதாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

1991ம் ஆண்டில் பாகிஸ்தானில் பிறரன்பு இல்லம் ஒன்றைத் திறப்பதற்காக வந்திருந்த அன்னையவர்கள், லாகூர் குருத்துவக் கல்லூரிக்கும் வருகைதந்தார் என்றும், கராச்சியில் புனித பேட்ரிக் பேராலயத்தில், பெருமளவான மக்களைச் சந்தித்தார் என்றும் கூறினார், ஆயர் அர்ஷத்.

செப்டம்பர் 4ம் தேதி, அன்னை தெரேசா அவர்களின் புனிதர் பட்ட நிகழ்விலும் கலந்துகொள்ளவிருக்கும் ஆயர் அர்ஷத் அவர்கள், புதிய புனிதர் அன்னை தெரேசா அவர்களின் பெயரில், செப்டம்பர் 11ம் தேதி ஃபாய்சலாபாத், தூயவர்கள் பேதுரு, பவுல் பேராலயத்தில், நன்றித் திருப்பலியையும் நிறைவேற்றவுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.