2016-08-20 15:48:00

உலக கொசு ஒழிப்பு தினம் ஆகஸ்ட் 20


ஆக.20,2016. கொசுக்கடியினால் மனித உயிர்களுக்கு ஏற்பட்டுவரும் ஆபத்துக்கள் குறித்தும், அதிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்து கொள்வதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20ம் தேதி, உலக கொசு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 20, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட இந்த உலக  நாளில், நலவாழ்வே செல்வம், நலவாழ்வுக்கு முன்னுரிமை கொடுக்கத் தவறாதீர், நம் நகரத்தையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வோம் போன்ற விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் வழங்கப்பட்டன.

மனிதர்கள் மத்தியில், பெண் கொசுக்கள், மலேரியாவைப் பரப்புகின்றன என்று, 1897ம் ஆண்டில், பிரித்தானிய மருத்துவர் Sir Ronald Ross அவர்கள் கண்டுபிடித்தார். இந்த நாளின் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 20ம் தேதி, உலக கொசு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

கொசுக்களினால், மலேரியா, டெங்கு, சிக்கன்குன்யா, மஞ்சள் காய்ச்சல், ஜப்பானிய  Encephalitis, Filariasis போன்ற நோய்கள் பரவுகின்றன. 

மலேரியாவால், 2015ம் ஆண்டில், உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ பாதிப் பேர், அதாவது, 320 கோடிப்பேர் தாக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கினர், 21 கோடியே 40 இலட்சம் பேர் அந்நோயால் தாக்கப்பட்டனர் மற்றும் 4 இலட்சத்து 38 ஆயிரம் பேர் அதனால் இறந்தனர் என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.

உலகில், மலேரியாவின் பாதிப்பை 90 விழுக்காடு குறைப்பதற்கு, 2030ம் ஆண்டுக்குள் 870 கோடி டாலர், ஒவ்வோர்  ஆண்டும் தேவைப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

மலேரியாவால், ஆண்டுக்கு 10 இலட்சம் பேர் இறப்பதாகவும், இந்நோய் தாக்கப்பட்ட ஒவ்வொரு 30 வினாடிகளுக்கும் ஒரு குழந்தை வீதம் பலியாவதாகவும், ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.