2016-08-19 15:28:00

பிறருக்குத் திறந்தமனதுள்ளவராய் வாழும் பண்பில் வளர அழைப்பு


ஆக.19,2016. “நீங்கள் எனக்கு நல்லவர்கள்” என்ற தலைப்பில், இத்தாலியின், ரிமினி நகரில், இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ள, 37வது மக்கள் மத்தியில் நட்புறவு கூட்டத்திற்குச் செய்தி அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தலைப்பை மையமாக வைத்து செய்தி வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்கள், பிறருக்குத் திறந்தமனம் கொண்டவர்களாய் வாழ்கின்ற பண்பை, எப்போதும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

எந்த ஒரு மனிதரும் நிரந்தரமாகத் தொலைந்துபோனவர் அல்ல என்பதற்கு, காணாமற்போன மகன், வரிவசூலிக்கும் சக்கேயு, நல்ல கள்வர் போன்றவரை, நற்செய்தி நமக்கு எடுத்துக்காட்டாக முன்வைக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, மற்றவரின் பன்மைத்தன்மையோடு, அவர்களின் தோழமையில் ஒவ்வொருவரும் சுதந்திரமாகவும், மகிழ்வாகவும் வாழ இயலும் என்றும் கூறியுள்ளார்.

மக்கள் மற்றும் நாடுகளின் அமைதியும், பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இக்காலத்தில், உரையாடலை மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்தியுள்ள திருத்தந்தை, இறைத்தந்தையின் இரக்கம்நிறை அன்பிற்குச் சாட்சிகளாக வாழுமாறும் அனைவரையும் விண்ணப்பித்துள்ளார். திருத்தந்தையின் இவ்விண்ணப்பங்கள் அடங்கிய செய்தியை, திருத்தந்தையின் பெயரில், ரிமினி ஆயர் பிரான்செஸ்கோ லாம்பியாசி அவர்களுக்கு அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின். 

ஆகஸ்ட் 19, இவ்வெள்ளி முதல் ஒரு வாரத்திற்கு நடைபெறும் இக்கூட்டத்தில், பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்கின்றனர். உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும், பல்வேறு வாழ்வு நிலைகளிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்டுள்ள பேச்சாளர்கள், இதில் உரையாற்றுவார்கள். மக்கள் மத்தியில் நட்புறவை வளர்ப்பதற்காக, இத்தகைய கூட்டம், ஒவ்வோர் ஆண்டும் ரிமினியில் நடத்தப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.