2016-08-19 16:01:00

பாகிஸ்தான் சிறையில் கிறிஸ்தவக் கைதிகளுக்கு சிற்றாலயம்


ஆக.19,2016. பாகிஸ்தான் நாட்டுச் சிறை ஒன்றில், கிறிஸ்தவக் கைதிகளுக்கென சிற்றாலயம் ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக, UCA செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

Angel Patient Care Services என்ற அரசு-சாரா அமைப்பின் உதவியுடன், கராச்சி நகரிலுள்ள, Landhi சிறையில், கிறிஸ்தவக் கைதிகளுக்கென இம்மாதம் 5ம் தேதி இச்சிற்றாலயம் திறக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக, கிறிஸ்தவக் கைதிகளுக்கென, தனிப்பட்ட வழிபாட்டுத் தலம் அவசியம் என்ற நீண்ட நாள் ஆவல், நிறைவேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அச்சிறையிலுள்ள மசூதிக்கு சில மீட்டர் தூரத்தில், இந்தக் கிறிஸ்தவ  சிற்றாலயம் அமைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 40 முதல் 50 வரையிலான கிறிஸ்தவக் கைதிகள், இவ்வாலயத்தில் செபிக்கின்றனர் மற்றும் ஞாயிறு செபங்களிலும் பங்கு பெறுகின்றனர்.  

இது குறித்துப் பேசிய, சிறை அதிகாரி முகமது ஹாசன் அவர்கள், அனைத்து மதக் கைதிகளும், சுதந்திரமாகத் தங்கள் மதங்களை அனுசரிக்கலாம் என்று கூறினார்.

மேலும், இது குறித்துப் பேசிய, காவல்துறையின் உதவித் தலைவர் Ishtiaq Awan அவர்கள், கைதிகள் அனைவரும் ஒன்றாக வைக்கப்பட்டிருக்கின்றபோதிலும், கிறிஸ்மஸ், கிறிஸ்து உயிர்ப்பு, ரமதான் போன்ற சிறப்பு விழாக் காலங்களில், இவர்கள் தனித் தனியாகப் பிரிக்கப்பட்டு, தங்கள் விழாக்களைக் கொண்டாடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்தார்.

Landhi சிறையிலுள்ள 4,500 கைதிகளுள், 100 பேர் கிறிஸ்தவர்கள். இவர்கள், பல்வேறு குற்றங்களுக்காகத் தண்டனை அனுபவிப்பவர்கள் அல்லது விசாரணைக்காகக் காத்திருப்பவர்கள். 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.