2016-08-19 15:51:00

Panglong கருத்தரங்கு அமைதியின் திருப்பயணம், கர்தினால் போ


ஆக.19,2016. மியான்மாரில், 21ம் நூற்றாண்டின் Panglong கருத்தரங்கு இம்மாதம் 31ம் தேதி ஆரம்பிக்கவுள்ளவேளை, இந்நிகழ்வை, நம்பிக்கையோடு நோக்குமாறு, நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் அந்நாட்டுத் தலத்திருஅவை அதிகாரி ஒருவர்.

இராணுவத்திற்கும், பல ஆண்டுகளாக தன்னாட்சி கேட்டுப் போராடும் மியான்மார் இனக் குழுக்களுக்கும் இடையே, அமைதிப் பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கும் நோக்கத்தை இக்கருத்தரங்கு கொண்டுள்ளது.

1947ம் ஆண்டுக்குப் பின்னர், மிக முக்கியமான வரலாற்று நிகழ்வாக நோக்கப்படும் இக்கருத்தரங்கை, அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இக்கருத்தரங்கை முன்னிட்டு, மியான்மார் குடிமக்களுக்கு செய்தி வெளியிட்டுள்ள அந்நாட்டுக் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள், 1947ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி மியான்மார் ஒன்றியம் பிறப்பதற்கு வழி அமைத்த Panglong அமைதி ஒப்பந்தத்திற்குப் பின்னர் இடம்பெறும் முக்கிய நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளார். இதனை, அமைதியின் திருப்பயணமாக நோக்குமாறும் கேட்டுள்ளார் கர்தினால் போ.

இந்த ஒப்பந்தத்தில், Bama, Chin, Kachin, Shan ஆகிய 4 இனக் குழுக்கள் கையெழுத்திட்டன. மியான்மாரில், 135க்கும் மேற்பட்ட இனக் குழுக்கள் உள்ளன.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.