2016-08-18 15:31:00

வீடற்றவர்களும் கடற்கரையில் குளித்து மகிழும் வாய்ப்பு


ஆக.18,2016. கோடை காலத்தில் கடற்கரைக்குச் செல்லும் பல உரோம் மக்களைப் போல, இந்நகரில் வாழும் வீடற்றவர்களுக்கும் அந்த வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளது, திருத்தந்தையின் தர்மப்பணித் துறை.

திருத்தந்தையின் தர்மப்பணிகளுக்குப் பொறுப்பாக உள்ள பேராயர் கோன்ராட் கிராஜுவ்ஸ்கி (Konrad Krajewski) அவர்கள், Vatican Insider என்ற செய்தி இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியொன்றில், தான் இதுவரை, 100க்கும் அதிகமான வீடற்றோரை கடற்கரையில் ஒரு நாளைச் செலவிட அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறினார்.

உரோம் நகரிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் இருக்கும் கடற்கரைக்கு, ஒவ்வொரு  நாளும் 10 பேர் என்ற பாணியில், வீடற்றோரை அவர் அழைத்துச் சென்று, அவர்கள் கடலில் குளித்தபின், அவர்களுக்கு பீஸ்ஸா வழங்கப்படுவதாக, பேராயர் கிராஜுவ்ஸ்கி அவர்கள், குறிப்பிட்டார்.

உரோம் நகரில் வீடற்றோர் பிரச்னையை குறைக்கமுடியவில்லை என்றாலும், அவ்விதம் வாழ்வோருக்கு இத்தகைய விடுமுறை அனுபவத்தை வழங்குவதால், அவர்களும் மனிதர்கள் என்ற உணர்வை உருவாக்க முடிகிறது என்று பேராயர் கிராஜுவ்ஸ்கி அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

திருத்தந்தையின் பெயரால் இயங்கி வரும் தர்மப்பணிகளால், வீடற்றோருக்கு, உறங்கும் இடங்கள், முடிதிருத்தும் நிலையங்கள், குளியல் அறைகள், நடமாடும் மருத்துவ மனைகள் ஆகிய உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.