2016-08-18 15:23:00

திருத்தந்தையைச் சந்தித்த பிரெஞ்சு அரசுத் தலைவர்


ஆக.18,2016. ஆகஸ்ட் 17, புதன் மாலை 4.45 மணிக்கு, பிரெஞ்சு நாட்டு அரசுத் தலைவர் Francois Hollande அவர்களுக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், வத்திக்கான், அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தின் ஒரு பகுதியில் உள்ள அறையில், தனிப்பட்ட சந்திப்பு நிகழ்ந்தது.

அரசுத் தலைவர் Hollande அவர்களையும் உடன் வந்திருந்த பிரெஞ்சு உள்துறை அமைச்சர் Bernard Cazeneuve, பிரெஞ்சு நாட்டின் சார்பில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றும் Philippe Zeller ஆகியோரை, பாப்பிறை இல்லத்தின் மேற்பார்வையாளர், பேராயர் Georg Gänswein அவர்கள் வரவேற்றார் என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் Greg Burke அவர்கள் கூறினார்.

திருத்தந்தைக்கும், பிரெஞ்சு அரசுத் தலைவருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் நிகழ்ந்த இச்சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்தது என்றும், பின்னர், இருவருக்கும் இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறப்பட்டன என்றும் Burke அவர்கள் கூறினார்.

இறைவாக்கினர் எசாயாவின் "பாலை நிலத்தை தோட்டம் போல் ஆக்குவார்" என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்ட ஒரு வெண்கல வில்லையையும், 'இறைவா உமக்கே புகழ்' மற்றும் 'அன்பின் மகிழ்வு' என்ற தலைப்புக்களில் தான் எழுதிய நூல்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரெஞ்சு அரசுத் தலைவருக்குப் பரிசளித்தார்.

இச்சந்திப்பிற்குப் பிறகு, அரசுத்தலைவர் Hollande அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகளின் செயலர், பேராயர் பால் காலகர் அவர்களையும் சந்தித்தார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர், Burke அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், பிரெஞ்சு அரசுத் தலைவர் Hollande அவர்களும், 2014ம் ஆண்டு சனவரி மாதம், முதல் முறையாகச் சந்தித்தனர் என்பதும், ஜூலை மாதம் 26ம் தேதி, அருள் பணியாளர் Jacques Hamel கொல்லப்பட்டதையடுத்து தொடர்ந்து, அரசுத் தலைவர் Hollande அவர்கள் திருத்தந்தையை தொலைப்பேசியில் அழைத்து தன் வருத்தத்தைத் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.