2016-08-18 15:30:00

ஜான்பால் பாப்பிறை நிறுவனத்தின் புதிய தலைமை வேந்தர்


ஆக.18,2016. பரந்து விரிந்த இரக்கம் என்ற தொடுவானத்திற்கு முன், திருமணம், குடும்பம், வாழ்வு என்ற அம்சங்கள் புதிய கண்ணோட்டங்களை, புதிய பரிமாணங்களை அடையவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீட அதிகாரி ஒருவருக்கு வழங்கிய நியமனக் கடிதத்தில் கூறியுள்ளார்.

குடும்பப் பணிகள் திருப்பீட அவையின் தலைவராகப் பணியாற்றிவந்த பேராயர் வின்சென்சோ பாலியா (Vincenzo Paglia) அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2ம் ஜான்பால் பாப்பிறை நிறுவனத்தின் தலைமை வேந்தராகவும், வாழ்வை ஆதரிக்கும் பாப்பிறை கல்விக் கழகத்தின் தலைவராகவும் நியமனம் செய்து அளித்துள்ள கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் கொள்கைத் திரட்டுக்கள், குடும்பங்களை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெற்ற இரு ஆயர் மாமன்றங்கள், அன்பின் மகிழ்வு என்ற திருத்தூது அறிவுரை மடல் ஆகியவை பரிந்துரைக்கும் மறுமலர்ச்சிகளை குடும்பங்களில் உருவாக்குவது பேராயர் பாலியா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு என்று, திருத்தந்தை தன் மடலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேராயர் பாலியா அவர்கள் பொறுப்பேற்றிருக்கும் இரு அமைப்புக்களும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பொதுநிலையினர், குடும்பம், வாழ்வு திருப்பீட அவையுடன் இணைந்து, திருஅவைக்கு கிறிஸ்தவ குடும்பங்கள் ஆற்றவேண்டிய பணிகளை தெளிவுபடுத்தும் என்பது தன் நம்பிக்கை என்று, திருத்தந்தையின் நியமன மடல் கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.