2016-08-17 15:47:00

பொதுநிலையினர்,குடும்பம், மற்றும் வாழ்வு-புதிய திருப்பீட அவை


ஆக.17,2016. அன்புடன் பராமரிக்கும் அன்னையாம் திருஅவை, இத்தனை நூற்றாண்டுகளாக பொதுநிலையினர் மீதும், குடும்பங்கள் மீதும் அக்கறையும் மதிப்பும் கொண்டுள்ளது என்ற வார்த்தைகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு புதிய திருப்பீட அவையை உருவாக்கியுள்ளார்.

பொதுநிலையினர் குடும்பம் மற்றும் வாழ்வு என்ற பெயருடன் தனிப்பட்ட ஒரு திருப்பீட அவையை தான் உருவாக்குவதாக, 'சுய விருப்பத்துடன்' என்ற பொருள்படும் 'Motu Proprio' என்ற ஆணையொன்றில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரியன்னை விண்ணேற்படைந்த நாளன்று கையெழுத்திட்டார்.

பொதுநிலையினர், குடும்பம், வாழ்வு என்ற பெயருடன் உருவாக்கப்பட்டுள்ள இத்திருப்பீட அவை குறித்த செய்தி, ஆகஸ்ட் 17, இப்புதனன்று வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்க ஐக்கிய நாட்டின் டல்லஸ் மறைமாவட்ட ஆயர், கெவின் ஜோசப் ஃபாரேல் (Kevin Joseph Farrell) அவர்களை, இத்திருப்பீட அவைக்குத் தலைவராக நியமித்துள்ளார், திருத்தந்தை.

பொதுநிலையினர் திருப்பீட அவை, மற்றும் குடும்ப திருப்பீட அவை என்று செயல்பட்ட இருவேறு அவைகளின் பணிகள், இனி, பொதுநிலையினர், குடும்பம், வாழ்வு என்ற ஒரே திருப்பீட அவையாகச் செயலாற்றும் என்று, திருத்தந்தை தன் ஆணையில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநிலையினரும், குடும்பமும் நற்செய்தியின் சான்றுகளாக வாழ்கின்றனர் என்பதால் இத்திருப்பீட அவையை தான் உருவாக்கியுள்ளதாகக் கூறியத் திருத்தந்தை, புதிய திருப்பீட அவை, வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல், தன் பணிகளைத் துவக்கும் என்றும், தன் சுய விருப்ப ஆணையில் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.