2016-08-17 14:51:00

புதன் மறைக்கல்வி உரை : இறைஇரக்கத்தின் சாட்சிகளாக மாறுவோம்


ஆக.17,2016.   ஆகஸ்ட் மாதம் இத்தாலிக்கு வெப்பத்தின் உச்ச மாதம். இருந்தாலும், இந்த வெப்பமெல்லாம், வத்திக்கானுக்கு வரும் திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்துவதில்லை. மக்களை வெயிலின் தாக்கத்திலிருந்து காப்பாற்றும் நோக்கில்,  இம்மாதத்தின் புதன் மறைக்கல்வி உரைகள்,  திருத்தந்தை அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்திலேயே இடம்பெறுகின்றன என்பது நீங்கள் அறிந்ததே. திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரையைக் கேட்பதற்கு, திருப்பயணிகளின் கூட்டம், அரங்கத்தை நிறைத்திருக்க, இத்திருப்பயணிகளுக்கு, 'அப்பம் பலுகிய’ இயேசுவின் புதுமை குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 'இரக்கம் என்பது ஒன்றிப்பின் கருவி' என்பதை மையக் கருத்தாகக் கொண்டு திருத்தந்தையின் இப்புதன் உரை இருந்தது.

அன்புச் சகோதர சகோதரிகளே, இரக்கத்தின் யூபிலி ஆண்டு, நம் மறைக்கல்வி உரைத் தொடரில் இன்று, 'இயேசு அப்பத்தையும் மீன்களையும் பலுகச் செய்த புதுமை' குறித்து நோக்குவோம். புனித மத்தேயு நற்செய்தி 14ம் பிரிவு திருச்சொற்றொடர்கள் 13 முதல் நோக்கினோமென்றால், இயேசு தனிமையாகச் சென்று செபம் செய்ய விரும்பினார் என்பதை அறிகிறோம். ஆனால், ஆதரவின்றி நின்ற மக்கள் கூட்டத்தைக் கண்டு, இரக்கம் கொண்டவராக, அவர் அவர்களோடு இருக்க விரும்பியதையும் காண்கிறோம். அந்த மக்கள் கூட்டத்திற்கு உணவை வழங்கும்படிக் கூறும் இயேசு, அதன் வழியாக, அவர்களுக்கு விசுவாசத்தையும், தேவையில் இருப்போர் மீதான தன் அக்கறையில் பங்கெடுப்பதையும் கற்பிக்கிறார். அப்பத்தையும் மீன்களையும் பலுகச்செய்த இந்தப் புதுமையானது, இரக்கம் நிறைந்த அக்கறையின் உறுதியான அடையாளமாகும். இயேசு அந்த அப்பத்துண்டுகளை கையில் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, அவைகளை ஆசீர்வதித்து பிட்டுக் கொடுத்த அந்த நிகழ்வு, அவர் இறுதி இரவு உணவின்போது திருநற்கருணையை உருவாக்கியதை நம் கண்முன் தெளிவாகக் கொணர்கிறது.  திருநற்கருணைப்பலியில் பங்குகொள்வதன் வழியாக, நாம், ஆன்மீக ஊட்டத்தை மட்டும் பெறவில்லை, இயேசுவில், மேலும் சிறப்பான விதத்தில் உறுதிச் செய்யப்படுகிறோம். அதுமட்டுமல்ல, நம்மைச் சுற்றியிருப்போரிடையே நாம், இயேசுவின் இரக்கம் நிறை இருப்பின் அடையாளங்களாக மாறுகின்றோம். கிறிஸ்துவின் உடலின் அங்கத்தினர்களாகிய நாமனைவரும், நம் குடும்பங்களுக்கும், சமுதாயத்திற்கும், குறிப்பாக தேவையில் இருக்கும் அனைவருக்கும், இறைவனின் நெருக்கம், இரக்கம் மற்றும் அன்பெனும் ஊட்டச்சத்தைக் கொணர்வோமாக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.