2016-08-17 16:13:00

ஒதுக்கப்பட்ட மக்களுக்குப் பணியாற்றிய அன்னை தெரேசா


ஆக.17,2016. சமுதாயத்தின் ஓரங்களுக்கு, குறிப்பாக, மிகக் கடினமானச் சூழல்களில் வாழும்படி ஒதுக்கப்பட்ட மக்கள் மத்தியில் தான் பணியாற்றியதோடு, அப்பணியில், தன் துறவுசபை அருள் சகோதரிகளையும் முழு மூச்சுடன் ஈடுபடச் செய்தவர், அன்னை தெரேசா என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் சார்பில் திருப்பீடத்தில் பணியாற்றும் தூதர் ஒருவர் கூறினார்.

அன்னை தெரேசாவின் பணிகள் பலவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட தூதர், Ken Hackett அவர்கள், 1997ம் ஆண்டு, கொல்கத்தாவில் நடைபெற்ற அன்னையின் இறுதி ஊர்வலத்திலும், 2003ம் ஆண்டு, வத்திக்கானில், அன்னை அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்ட நிகழ்விலும் தான் கலந்துகொண்டதை, CNS கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியில் நினைவுகூர்ந்தார்.

எத்தியோப்பியாவில் கடும் பட்டினியும், அடக்குமுறையும் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டில், அன்னை தெரேசா அவர்கள் புதிய இல்லம் ஒன்றைத் துவங்கினார் என்று கூறிய Hackett அவர்கள், சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்வோரைத் தேடிச் செல்லுங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொல்லி வரும் அறிவுரையை, அன்னை தெரேசா ஏற்கனவே வாழ்ந்துகாட்டினார் என்று கூறினார்.

அமெரிக்க அரசுத் தலைவர்களைச் சந்தித்தபோது, கருக்கலைப்பிற்கு எதிரான தன் கருத்துக்களை, துணிந்து வெளியிட்ட அன்னை தெரேசா அவர்கள், கருவில் தோன்றியதுமுதல், கல்லறை முடிய உயிர்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாடு கொண்டிருந்தார் என்று, தூதர் Hackett அவர்கள் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.