ஆக.17,2016. அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் இஸ்லாமிய மத குரு ஒருவரும், அவருடன் சென்றவரும் கொலையுண்ட வன்முறைக்கு எதிராக, பங்களாதேஷ் ஆயர் பேரவை தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 13, கடந்த சனிக்கிழமை, பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 55 வயது நிறைந்த Maulana Alauddin Akonjee என்ற மத குருவும், அவருடன் சென்ற Thara Uddin என்ற 64 வயது நிறைந்த ஒருவரும் தங்கள் மதிய வழிபாட்டை முடித்து வந்துகொண்டிருந்தபோது, துப்பாக்கியால் தலையில் சுடப்பட்டு இறந்துள்ளனர்.
இந்தக் கொலைகளை தாங்கள் வன்மையாகக் கண்டனம் செய்வதாகவும், மதத்தின் அடிப்படையில் பரவிவரும் வெறுப்பு உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்றும், பங்களாதேஷ் ஆயர் பேரவையின் நீதி, அமைதி பணிக்குழுவின் தலைவர், ஆயர், கெர்வாஸ் ரொசாரியோ (Gervas Rozario) அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இக்கொலையுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் Oscar Morel என்ற 35 வயது இளையவரை காவல் துறையினர் கைது செய்துள்ளதாக ஆசிய செய்தி கூறுகிறது.
இக்கொலைகளைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 14, ஞாயிறன்று, மத நம்பிக்கையுள்ள பல நூறுபேர் ஓசோன் பார்க் எனுமிடத்தில் அமைந்துள்ள தொழுகைக் கூடத்தில் நினைவஞ்சலி செலுத்தினர் என்று ஆசிய செய்தி மேலும் கூறுகிறது.
ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |