2016-08-17 16:05:00

'இரக்கத்திற்கு ஓர் அழைப்பு' - அன்னை தெரேசாவின் புதிய நூல்


ஆக.17,2016. அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு, வீடின்றி, தெருவில் வாழ்வோரைக் காணும்போது, தன்னுடைய ஆன்மீகப் பயணத்தில், அதுபோல் உணர்ந்த நேரங்கள் நினைவுக்கு வருகின்றன என்று அருளாளர் அன்னை தெரேசா கூறியுள்ளார்.

அன்னை தெரேசா அவர்கள் கூறியதாகச் சொல்லப்படும் கருத்துக்கள், குறிப்பாக, இதுவரை அச்சு வடிவில் வெளியிடப்படாதக் கருத்துக்கள், ஒரு நூல் வடிவில் தொகுக்கப்பட்டு, ஆகஸ்ட் 16ம் தேதி, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது.

'இரக்கத்திற்கு ஓர் அழைப்பு: அன்பு செய்வதற்கு உள்ளமும், பணியாற்ற கரங்களும்' என்ற தலைப்பில், Image Books என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்நூலுக்கு, அன்னை தெரேசாவின் புனிதர்பட்ட பணிகளில் ஈடுபட்டிருந்த அருள் பணியாளர், Brian Kolodiejchuk அவர்கள் முன்னுரை வழங்கியுள்ளார்.

வீடின்றி தெருவில் வாழ்வோர் என்ற நிலை, வறுமைப்பட்ட நாடுகளில் மட்டுமல்ல, செல்வம் மிகுந்த நாடுகளிலும் உள்ளது என்பதை இந்நூலில் கூறியுள்ள அன்னை தெரேசா அவர்கள், இப்பிரச்சனையைத் தீர்க்க தன்னுடைய துறவு சபை மேற்கொண்ட பல முயற்சிகள் குறித்தும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் என்று Zenit கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.