2016-08-17 15:08:00

இரக்கத்தின் தூதர்கள் – அருளாளர் அன்னை தெரேசா பாகம் 11


ஆக.17,2016.  “அன்பு, வீட்டில் தொடங்குகிறது, அங்கு வாழ்கிறது. அளவற்ற துயரமும், அளவற்ற மகிழ்ச்சியின்மையும் இன்று இவ்வுலகில் இருப்பதற்கு, அன்பில்லாமைதான் காரணம். இறைவன் நம்மீது வைத்திருக்கும் அன்பை, நமது வாழ்வில் மீண்டும் கொண்டுவரவேண்டுமெனில், வீட்டிலிருந்தே அதை ஆரம்பிக்க வேண்டும். நமது வீட்டை, முடிவில்லாத மன்னிப்புகளுக்கும், கருணைக்கும் ஏற்ற இடமாக மாற்றிக்கொள்ள வேண்டும். இன்றைக்கு, ஒவ்வொருவருக்கும் எல்லாவற்றிலும் அவசரம். அதிகச் செல்வம் சேர்க்க வேண்டும் என்பதற்காகவும், அதிகமான முன்னேற்றத்திற்காகவும், மனக்கவலை கொள்கின்றனர். எனவே, குழந்தைகள், பெற்றோருடன் சிறிது நேரமே செலவழிக்கிறார்கள். பெற்றோர்களும் அப்படியே. எனவே உலக அமைதிக்கு கேடு வீட்டிலேயே ஆரம்பித்து விடுகிறது. ஒவ்வொருவரையும் முழுமையாகவும், உண்மையாகவும் அன்பு கூருபவர்கள், உலகில் மிக மகிழ்ச்சியானவர்கள். நமது ஏழை மக்களிடையே அத்தகைய மகிழ்ச்சியைப் பார்க்கிறோம்”. இப்படி, அன்பே மகிழ்ச்சி என்று, பேசியிருப்பவர் அருளாளர் அன்னை தெரேசா. அன்னை தெரேசா அவர்கள், கைவிடப்பட்ட எல்லார்மீதும் தனித்து அன்பு காட்டினார். குழந்தைகள் முதல் மரணத்தின் வாயிலைத் தொட்டுக்கொண்டிருக்கும் வயதானவர்கள்வரை, எல்லாருமே இவரது அன்பில் நனைந்தவர்கள்.

கொல்கத்தா டம்-டம் விமான நிலையத்திலிருந்து பார்த்தால், அதற்கு எதிரே “நிர்மலா கென்னடி இல்லம்” என்கிற, ஒரு பெரிய அழகான கட்டடம் தெரியும். இதுவே அன்னை தெரேசாவின் சிசுபவனம் எனப்படும் குழந்தைகள் காப்பகம். இந்த சிசுபவனம், நிர்மலா கென்னடி இல்லம் என்னும் பெயர் தாங்கி, இவ்வளவு அழகாகவும், பெரியதாகவும் இருப்பதற்கு ஒரு வரலாறு உள்ளது. 1971ம் ஆண்டில் நடந்த பங்களாதேஷ் போரின் விளைவாக, நிர்க்கதியாக, பல அகதிகள் கொல்கத்தாவில் தஞ்சம் புகுந்தனர். அந்த அகதிகளில் பலருக்கு, இந்த இல்லத்தில்தான் அடைக்கலம் கொடுத்தார் அன்னை தெரேசா. அகதி முகாம்களில், அன்னை தெரேசாவும், அவரோடு சேர்ந்தவர்களும் ஆற்றிய பணி இணையற்றது. அமெரிக்க செனட்டர் கென்னடி அவர்கள், அகதி முகாம்களைப் பார்வையிட வந்தபோது, அன்னையின் இந்த இல்லத்திற்கும் வந்தார். அன்னையின் மனிதம் நிறைந்த பணிகளைப் பார்த்து மகிழ்ந்து, ஒரு இலட்சம் ரூபாயைப் பரிசாக அளித்தார். அந்தப் பணம், இந்த சிசுபவனம் இல்லத்தின் வளர்ச்சிக்கு மேலும் மெருகூட்டியது.

இந்த சிசுபவனம், உருவானதற்கும் ஒரு பின்னணி உள்ளது. அது ஓர் அதிகாலை நேரம். அன்னை தெரேசா அவர்கள், ஓர் அவசர வேலையாக, ஒருவரைச் சந்திப்பதற்கு காரில் வேகமாகச் சென்று கொண்டிருந்தார். குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்த அந்த நேரத்திலும், காரின் கண்ணாடியை மூடாமல் சென்று கொண்டிருந்தார் அன்னை. அது வழியாகத் தலையை வெளியே நீட்டி சாலையின் ஓரங்களைப் பார்த்துக்கொண்டே சென்றார் அன்னை. இப்படிச் செல்வது அவரின் வழக்கம். கார், பல வளைவுகளைக் கடந்து, கோணலான ஒரு குறுகிய சாலை வழியே சென்று கொண்டிருந்தபோது, அன்னை திடீரென, காரை நிறுத்துங்கள் என்று, உரத்த குரலில் ஓட்டுனரிடம் கூறினார். அன்னையின் பதட்டமான குரலைக் கேட்டு, அவரும் உடனே காரை நிறுத்தினார். அன்னை, காரின் கதவைத் திறந்துகொண்டு, நாற்சந்தியிலிருந்த குப்பைத் தொட்டியை நோக்கி நடந்தார். அந்தக் குப்பைத் தொட்டியிலிருந்த காகிதப் பொட்டலத்தை அன்னை கையிலெடுத்து இலேசாகப் பிரித்தார். சில மணி நேரங்களுக்கு முன்னரே பிறந்திருந்த ஒரு பச்சை குழந்தை இருந்தது. சிறிது ஊனமுற்றிந்திருந்த அந்தக் குழந்தை உயிருடனேயே இருந்தது. தான் போக வேண்டிய இடத்தை மறந்து, ஓட்டுனரிடம், உடனே காரை நம் இல்லத்திற்கு விடுங்கள் என்றார் அன்னை.

இல்லம் சென்று, குழந்தையைக் குளிப்பாட்டி, செய்ய வேண்டிய முதலுதவிகளை உடனடியாகச் செய்தார் அன்னை தெரேசா. உடனடியாக ஒரு குழந்தைகள் காப்பகம் தேவை என்பதை உணர்ந்தார் அன்னை. அதற்காக அவர் வீடு தேடி அலைந்தார். ஒரு காலியான வீடு கண்ணில் பட்டது. அந்த வீட்டு உரிமையாளரான, அர்மேனியன் மெக்காடி என்பவர், 300 ரூபாய் வாடகை கேட்டார். அன்னை சிறிது தயங்கினார். ஆனால் அந்த ஆள் குறைக்கவே இல்லை. வேறு வழியின்றி அதற்கு ஒப்புக்கொண்டு விட்டார் அன்னை. குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த அக்குழந்தையே அந்த சிசுபவனத்தின் முதல் குழந்தை. நாளடைவில் அந்த வீட்டையே விலைக்கு வாங்கி விட்டார் அன்னை. சிசுபவனமும் நன்றாக வளரவும், செயல்படவும் தொடங்கிவிட்டது.

வளர்க்க முடியாமல், பிறரால் கைவிடப்பட்ட குழந்தைகள், தவறாகப் பிறந்த குழந்தைகள், அனாதைக் குழந்தைகள்.. இப்படி பலவிதங்களில், பெற்றோருக்கும், மற்றவருக்கும் வேண்டப்படாத குழந்தைகள், அந்த சிசுபவனத்தில் மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். “கடவுளைக் காண வேண்டுமா, குழந்தைகளைப் பாருங்கள்” என்றார் ப்ளூபெல். போரினாலும், பேரிடர்களாலும், வறுமையாலும், எத்தனையோ குழந்தைகள் உலகின் பல இடங்களில் கைவிடப்பட்டு துன்புறுகின்றனர். இவர்களை நன்மனம் கொண்ட பலர் ஏற்று வருகின்றனர். இத்தகைய உள்ளங்களின் எண்ணிக்கை அதிகரிக்கட்டும்.    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.