2016-08-17 16:25:00

அமெரிக்க அரசுத்தலைவர் தேர்தலுக்குமுன் செபிக்க அழைப்பு


ஆக.17,2016. அமெரிக்க ஐக்கிய நாட்டின் அடுத்த அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், கத்தோலிக்கர்கள் அனைவரும் செபத்தில் ஈடுபட்டு, தெளிந்த மனசாட்சியுடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யவேண்டும் என்று, அந்நாட்டு பேராயர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார் என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

பிலடெல்பியா உயர் மறைமாவட்டத்திலிருந்து வெளியாகும் கத்தோலிக்க இதழில், பேராயர் சார்ல்ஸ் சாப்புட் (Charles Chaput) அவர்கள் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், அரசுத்தலைவர் போட்டியில் ஈடுபட்டுள்ள இரு வேட்பாளர்களும் குறைகள் உள்ளவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த சில வாரங்களில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட உள்ளதால், தேர்தல் நெருங்கிவரும் இந்நாட்களில், நம் கருத்துக்களைப் பாதிக்கும் வகையில் வந்துசேரும் தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களின் கருத்துக்களை நிறுத்திவிட்டு, அமைதியில் செபிக்குமாறு பேராயர் சாப்புட் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

நாம் பயணம் செய்யும் வாகனத்தை, 'Autopilot' எனப்படும் தன்னிச்சையான போக்கிலே விட்டுவிடுவதுபோல், வாழ்வை, வெளிப்புறச் சக்திகளிடம் சரணடைய விடக்கூடாது என்று தன் கட்டுரை வழியே அறிவுறுத்திய பேராயர் சாப்புட் அவர்கள், நம் மனசாட்சியை இறைவன் நல்வழியில் நடத்திச் செல்ல இந்நேரத்தில் செபிப்போம் என்று விண்ணப்பித்துள்ளார்.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.