2016-08-16 15:53:00

மில்வாக்கி வன்முறை, தனக்குத்தானே விதித்துக்கொண்ட காயம்


ஆக.16,2016. அமெரிக்க ஐக்கிய நாட்டின் மில்வாக்கி நகரில், கடந்த வார இறுதியில் இடம்பெற்ற வன்முறை, தனக்குத்தானே விதித்துக்கொண்ட காயம் என்று, அந்நகர் பேராயர் Jerome E. Listecki அவர்கள் கூறியுள்ளார்.

மில்வாக்கி நகரின் புறநகர்ப் பகுதியிலுள்ள ஜெர்மான் பூங்காவில், ஆயுதத்தைக் கொண்டிருந்த, 23 வயது நிரம்பிய, ஆப்ரிக்க-அமெரிக்க இளைஞர் சுடப்பட்டது தொடர்பாக எழுந்த போராட்டத்தில், தீ வைப்புகளும், சூறையாடல்களும் இடம்பெற்றுள்ளன.

போராட்டங்கள் மேற்கொள்வது, நிச்சயமாக, ஒவ்வோர் அமெரிக்கரின் உரிமையாகும் எனினும், தீ வைப்பு, சூறையாடல் போன்ற வன்முறைகள் ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாதவை என்று, பேராயர் Listecki அவர்கள் கூறியுள்ளார்.

இவை, ஒரு சமூகம், தனக்குத்தானே காயத்தை ஏற்படுத்துவதாகவே அமையும் என்றும் கூறியுள்ளார் பேராயர் Listecki.

மில்வாக்கி நகரில், போராட்டங்களை மேற்கொண்டவர்கள், பெட்ரோல் நிரப்பும் நிலையம் உட்பட, ஆறு வணிக நிறுவனங்களுக்கும், ஒரு காவல்துறை வாகனத்திற்கும் தீ வைத்துள்ளனர்.

சில்வில்லே ஸ்மித் என்ற இளைஞன், தனது கைத்துப்பாக்கியைக் கீழே போட மறுத்ததால், காவல்துறை அவனைச் சுட்டது என்று செய்திகள் கூறுகின்றன.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.