2016-08-16 15:29:00

கலாச்சாரங்களிடையே உரையாடலுக்கு வாய்ப்பாக குடியேற்றதாரர்


ஆக.16,2016. தென் இத்தாலியின், லெயூக்கா நகரில், "மத்தியதரைக் கடல் பகுதி: பாலங்களின் ஒரு கடல்” என்ற தலைப்பில் நடைபெற்ற, பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றிற்குச் செய்தி அனுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

பல்வேறு நாடுகளிலிருந்து இதில் கலந்துகொள்ளும் இளையோர், மக்கள் மத்தியில் அமைதியையும், உடன்பிறப்பு உணர்வையும் ஊக்குவிக்கவும், மற்றவர்களை வரவேற்பது மற்றும் தோழமையுணர்வு கலாச்சாரத்தைப் புதுப்பித்துக் கொள்ளவும் இக்கருத்தரங்கு உதவும் என்ற, தனது நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை. 

பெருமளவான புலம்பெயர்ந்த மக்கள் பற்றி சிந்தித்து, மனிதாபிமானத்தில் வளரவும், கலாச்சாரங்கள் மற்றும் மதங்கள் மத்தியில் உரையாடலை ஊக்குவிக்கவும் ஒரு வாய்ப்பாகவும் இக்கருத்தரங்கு அமையும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் இச்செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், உஜெந்தோ-புனித மரியா லெயூக்கா மறைமாவட்ட ஆயர் வீத்தோ அன்ஜூலி அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரில் அனுப்பியுள்ளார்.  

மத்தியதரைக் கடல், மரணத்தின் கடலாக மாறுவதை நிறுத்தும் நோக்கத்தில், ஐரோப்பா மற்றும் மத்திய தரைக் கடல் பகுதி நாடுகளின் இளையோர்க்கென இக்கருத்தரங்கு நடைபெற்றது.

இஞ்ஞாயிறன்று நிறைவடைந்த இக்கருத்தரங்கில், லெயூக்கா ஆவணம் என்ற தலைப்பில், தீர்மானத் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டது. மத்திய தரைக் கடல் பகுதி நாடுகளைப் பாதுகாத்து, கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து செயல்பட, இளையோர் உறுதி வழங்கியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.