2016-08-15 15:20:00

வாரம் ஓர் அலசல் – அனைவரும் வாழ விரும்பும் அழகிய நாடாக...


ஆக.15,2016. அன்பு நெஞ்சங்களே, டெல்லி செங்கோட்டை, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை என, அனைத்து மாநிலத்  தலைநகரங்களில், தேசிய கொடியை ஏற்றி, இந்தியாவின் எழுபதாவது சுதந்திர தின விழா, நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. குடிமக்கள் அனைவரும், சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளைக் களைந்து, ஒற்றுமை உணர்வுடன், தாய்த் திருநாட்டின் வளர்ச்சிக்காக அயராது பாடுபடவும்,  அமைதி, வளம், சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை வளர்க்கவும் வேண்டும் என்பது, இந்நாளில் சிறப்பாக நினைவுபடுத்தப்பட்டது. இந்த இனிய நாளில், வீரதீரச் செயல்கள் ஆற்றியவர்களுக்குப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. ஆனால், விருதுகளையும், பதக்கங்களையும் பொருட்படுத்தாமல் சேவையாற்றும் நல் உள்ளங்களையும், இந்தப் பொன்னான நாளில் நினைவுகூர்ந்து அவர்களைப் பாராட்டுவோம். தமிழகத்தின் இராஜபாளையம் சங்கர் கணேஷ் அவர்கள், தொண்டாற்றுவதையே தனது கடமையாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார் என்று, தினமலர் நாளிதழில் வாசித்தோம். ஒருமுறை, ஒரு மருத்துவமுகாமில் குவிந்த பொதுமக்களை ஒழுங்குபடுத்த முடியாமல், முகாமில் உள்ளவர்கள் தவித்ததையும், முறையாக சிகிச்சை தரமுடியாமல் மருத்துவர்கள் நெளிந்ததையும் பார்த்த சங்கர் கணேஷ் அவர்கள், களத்தில் இறங்கினார்.'

“நமக்காக மருத்துவ சேவை செய்ய வந்திருக்காங்க இப்படி சத்தம் போட்டா எப்படி? எல்லாரும் வரிசைக்கு வாங்க, குழந்தைங்க பெரியவங்க, பெண்கள் எல்லாம் முன்னாடி போங்க, மற்றவர்கள் எல்லாம் பொறுமையா வாங்க, எல்லாரையும் பார்த்துவிட்டுத்தான் டாக்டருங்க போவாங்க…”'  என்று சொல்லி, ஓடி ஓடி உழைக்க, முகாம் ஓர் ஓழுங்குக்கு வந்தது. முகாம் நடத்தியவர்கள் பங்கு பெற்றவர்கள் பயன்பெற்றவர்கள் என்று எல்லாருமே சங்கரைப் பாராட்டினர்.  

“ஒரு நல்ல காரியம் செஞ்சதுக்கு இவ்ளோ பேர் பாராட்டுறாங்களே? மனுஷனா பிறந்ததே நாலு பேருக்கு நல்லது செய்யத்தானே, நாம இப்படி செலவு இல்லாம, நல்லது பல செய்யலாமே…”  என எண்ணி அன்று களம் இறங்கிய சங்கர், இன்று வரை களைப்படையவே இல்லை. கோவில் திருவிழா, விளையாட்டுப் போட்டிகள், தனியார், அரசு மற்றும் பொது விழாக்கள் என்று, எங்கெல்லாம் மக்கள் கூடுகிறார்களோ அங்கெல்லாம் இவராகவே சென்று, அங்குள்ள பொறுப்பாளர்களிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டு, நாற்காலி எடுத்துப்போடுவதில் இருந்து, உணவு பரிமாறுவது வரை, எந்த வேலை என்றாலும் சொல்லுங்கள், செய்கிறேன், பைசா காசு வேண்டாம், என் மனத்திருப்திக்காக செய்கிறேன் என்பார். இவரது தன்னார்வத் தொண்டு தற்போது எல்லையே இல்லாமல் பரவி வருகிறது. ஒரு முறை கபடிப் போட்டிக்கு பரிசளிக்க வந்த விருந்தினர், சங்கரின் சேவையைப் பார்த்துவிட்டு, பரிசு வழங்க பொருத்தமானவர் சங்கர்தான், காரணம் அவர்தான் இந்த போட்டி சிறப்பாக நடைபெற எல்லாரையும்விட உழைத்தவர் என்று சொல்லி சங்கர் கையாலேயே வீரர்களுக்குப் பரிசு வழங்கி கவுரவிக்கச் செய்தனர். கடந்த வாரம் மதுரையில், ஒரு விழாவில், சங்கரைக் கூப்பிட்டு பணமுடிப்பு வழங்கி பாராட்டி கவுரவிப்பதாகச் சொல்லி அழைத்தனர், ஆனால் அதேநேரம் பரமக்குடியில் ஒரு ஏழை விடுதி மாணவர்களுக்கு உணவு வழங்கும் சேவை செய்து கொண்டிருந்தார் அவர். எனவே, சங்கர் அவர்கள், எவ்வளவு பணமுடிப்பு என்றுகூட கேட்காமல், 'மாணவர்களுக்கு சாப்பாடு போட என்னைவிட்டால் ஆள் இல்லை, ஆகவே உங்கள் அழைப்பிற்கு நன்றி, விழாவிற்கு வரஇயலவில்லை மன்னிக்கவும்' என்று செய்தி அனுப்பியுள்ளார். மேலும், விழாக்கள் இல்லாத நேரத்தில், ஆதார் அட்டை விழிப்புணர்வு, அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும், டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி என்பது பற்றிய வாசகத்தை தனது சைக்கிளில் எழுதிக்கொண்டு ஊருக்குள் வலம் வருவார். தற்போது மரம் நடுவதில் ஆர்வம் செலுத்திவரும் சங்கர், இதற்காக பள்ளி கல்லுாரி மாணவர்களிடம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். வெறும் பிரச்சாரத்தோடு நிற்காமல் தனக்குக் கிடைக்கும் மரக்கன்றுகளை தெரு ஓரங்களில் நட்டு வளர்த்து பராமரித்து வருகிறார்.

பரிசுப்பொருள் வியாபாரம் செய்யும் சங்கர் கணேஷ் அவர்களுக்கு, நகைக்கடை பஜாரில் நண்பர்கள் அதிகம். அவர்கள் அவசரமாக கடையைவிட்டுப் போக வேண்டும் என்றால் உடனே தேடுவது சங்கரைத்தான். கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு எங்கு வேண்டுமானாலும் போய் வரலாம். மில்லியளவு தங்கத்துாள்கூட கடையைவிட்டு வெளியே போகாது. இப்படி நம்பிக்கை நாயகனாக இருந்த இவர், தற்போது தொண்டராக மாறியுள்ளார். இந்திய சுதந்திர தின நாளில் சங்கர் அவர்களை, எப்படிப் பாராட்டாமல் இருப்பது?   

அன்பர்களே, வளர்ந்த இந்தியாவில், நகர்ப்புற-கிராமப்புற வேறுபாடு, குறைவாக இருக்கும். மின்சாரம், குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும். விவசாயம்,தொழில்துறை, சேவைத்துறை ஆகியவை இணைந்து செயல்படும். கல்விக்கு முக்கியத்துவம் இருக்கும். ஆய்வாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அறிவியலாளர்களுக்கு ஏற்ற நாடாக இருக்கும். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் ஒழிந்திருக்கும். சமுதாயத்தில் அனைவருக்கும், அனைத்து வசதிகளும் கிடைக்கும். அனைவரும் வாழ விரும்பும் அழகிய நாடாக இருக்கும். இப்படிப்பட்ட ஒரு வளர்ந்த வல்லரசு நாடாக, இந்தியா நிச்சயம் மாறும் என, கனவு நாயகன் நம் அப்துல் கலாம் அவர்கள் கனவு கண்டார். இந்தியா விடுதலை அடைந்து 69 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் சுதந்திரத்தின் பலன் அனைத்து தரப்பு மக்களையும் சென்று அடைந்துவிட்டதா என்பது கேள்விக்குறியே. இத்தனை ஆண்டுகளில், அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் நாடு முன்னேறியிருக்கிறது. அவை  இராணுவ வலிமையை உயர்த்த பயன்பட்ட அளவுக்கு, பசியையும், வறுமையையும் ஒழிக்க பயன்படுத்தப்படவில்லை. அரசுகளின் பொருளாதாரக் கொள்கைகள் கோடீஸ்வரர்களை, பெருங்கோடீஸ்வரர்களாகவும், ஏழைகளை, பரம ஏழைகளாகவும் மாற்றிக்கொண்டிருக்கின்றன. ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் கல்வி, நலவாழ்வு ஆகிய சேவைகளும், விவசாயத்திற்கான தேவைகளும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். ஆனால், கல்விக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் பொறியியல் பட்டதாரிகள், தற்கொலை மூலம் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர். ஏழைப்பெண் ஒருவர், மகப்பேற்றுக்காக மருத்துவமனையில் கட்டணம் செலுத்த வழியில்லாததால், பெற்ற குழந்தையையே விற்ற செய்தியும் அண்மையில் வெளியானது.

மது அரக்கனின் ஆதிக்கம் அதிகரித்து, இந்தியா முழுவதும் மதுவை முழுமையாக ஒழிக்க வேண்டியதன் அவசியமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மதுவுக்கு அடிமையான நிலை மாறி, 4 வயது குழந்தைக்கு மது புகட்டப்படும் கொடுமை அரங்கேறியுள்ளது. அடுத்தகட்டமாக, பிறந்து 10 மாதமே ஆன குழந்தைக்கு, அதன் தந்தையே மது புகட்டும் கொடூரமும் தமிழகத்தில் நிகழ்ந்திருக்கிறது. நாட்டில் பெண்களுக்குச் சுதந்திரமும், பாதுகாப்பும் இல்லை. தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பெண் கடத்தப்படுவதாகவும், ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரத்தில், டெல்லியில், போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலை ஒன்றில், சிறிய வேன் மோதி, விபத்துக்குள்ளான நபர், ஒரு மணி நேரத்திற்கு மேலாக உயிருக்குப் போராடி அந்தச் சாலையிலேயே இறந்துவிட்டார். அந்த நபரை மோதித் தள்ளிய வேன் ஓட்டுனர் வெளியே வந்து அந்த நபரைப் பார்த்துவிட்டு, தனது வாகனத்தை எடுத்துச் சென்று விட்டார். அடுத்து, அந்த வழியாக வந்த ஒருவர், அடிபட்டவரிடமிருந்த கைபேசியைத் திருடிச் சென்று விட்டார். யாருமே உதவத் தயாராக இல்லாத, மனிதநேயமற்ற மனநிலையும் இந்தியாவில் வளர்ந்து வருவது கவலை தருகின்றது. இதுபோன்ற சமூக பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டால் மட்டுமே உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.

இந்தியா சுந்திரம் பெற்ற 1947ம் ஆண்டில், 1,100 மொழிகள் வழக்கத்தில் இருந்தன. ஆனால் தற்போது 880 மொழிகள் மட்டுமே உள்ளன. அவ்வாண்டில், இந்தியாவின் ஒரு ரூபாய், அமெரிக்காவின் ஒரு டாலருக்குச் சமமாக இருந்தது. அந்நிலை திரும்புமா... கடந்த 100 வருடங்களில் இந்தியர்களின் சராசரி உயரம் அதிகரித்துள்ளதாக, ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 1914 க்கும், 2014ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில், ஆண்களின் உயரம் சராசரியாக 3 செ.மீ., அதிகரித்து, அவர்களின் சராசரி உயரம் 165 செ.மீ., ஆக உள்ளது. பெண்களின் சராசரி உயரம் 5 செ.மீ., அதிகரித்து அவர்களின் சராசரி உயரம் 153 செ.மீ. ஆக உள்ளது. அன்பர்களே, இந்த வளர்ச்சி, உடலில் மட்டுமல்லாமல், எல்லா நிலைகளிலும் காணப்பட நாம் ஒவ்வொருவரும் முயற்சிப்போம். 1940களில் இந்தியர்களின் விடுதலை வேட்கையைத் தட்டியெழுப்பிய, நேதாஜி அவர்களின் ஜெய்ஹிந்த் - வெல்க இந்தியா என்ற ஒற்றை வார்த்தை, இன்று அனைத்து இந்தியரிலும் தேசப்பற்றை எழுப்பட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.