2016-08-15 16:00:00

பேராயர் ரொமேரோவின் நூறாம் ஆண்டு கொண்டாட்டங்கள் துவக்கம்


ஆக.15,2016. இங்கிலாந்தின் Southwark பெருமறைமாவட்டத்தில், அருளாளர்  Oscar Romero அவர்களின் நூறாவது பிறந்த ஆண்டு கொண்டாட்டங்கள் கடந்த சனிக்கிழமையன்று துவக்கி வைக்கப்பட்டன.

மக்களின் துன்பங்கள் கண்டு, அதனால் பாதிக்கப்பட்டு, அவர்கள் சார்பில் குரல் எழுப்பியதற்காக எல் சல்வதோர் நாட்டில் கொல்லப்பட்ட பேராயர் ஆஸ்கர் ரொமெரோ அவர்கள் பிறந்ததன் நூறாம் ஆண்டு கொண்டாட்டங்களை இங்கிலாந்தில் துவக்கி வைத்து மறையுரையாற்றிய, குடியேற்றதாரர்களுக்கான அவையின் தலைவர், ஆயர் Patrick Lynch அவர்கள்,  துன்பநிலைகள் கண்டு அதனால் பாதிக்கப்பட்டு, அவர்களோடு இருந்து அவர்களுக்காக குரல் எழுப்பும் நல்ல சமாரியர் பணியையே பேராயர் ரொமேரோவும் ஆற்றினார் என்றார்.

ஒவ்வொரு மனிதரின் மாண்பும் மதிக்கப்படவேண்டும் என்பதை மனதில்கொண்டு, துன்புறும் மக்களுக்காகக் குரல் எழுப்பும் இறை இரக்கத்தின் தூதர்களாக இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில் ஒவ்வொரு மனிதரும் செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்தார் ஆயர் Lynch.

பேராயர் ரொமேரோவின் 99வது பிறந்த நாளில், அவரது நூறாம் ஆண்டு பிறந்த தின ஓராண்டு கொண்டாட்டங்களை துவக்கி வைத்த இந்நிகழ்வில் , பிரிட்டனுக்கான எல் சல்வதோரின் தூதரும் கலந்து கொண்டார்.

அருளாளர் ரொமேரோவின் பெயரில் ஓராண்டிற்கு இடம்பெற உள்ள உரைகள், சடங்குகள், பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் போன்றவை வழியாக, அவரின் மறைசாட்சிய மரணம் மற்றும் எடுத்துக்காட்டான வாழ்வு குறித்து மக்களில் புதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிகழ்வுகள் அனைத்தும், Southwark பெருமாவட்டத்தின் நீதி மற்றும் அமைதி அவை, கத்தோலிக்க உதவி அமைப்புக்களான CAFOD, Missio, Pax Christi ஆகியவற்றின் ஒத்துழைப்போடு நடத்தப்பட உள்ளன.

ஆதாரம் : ICN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.