2016-08-13 14:41:00

பொதுக்காலம் - 20ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


பல ஆண்டுகளுக்கு முன், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரு பெருநகருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்நகரில் அவர் கண்டதனைத்தும், அவரை வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தின. தன் சொந்த ஊருக்குத் திரும்பியவர், மற்றவர்களிடம் ஒவ்வொரு நாளும், இடைவிடாமல், தன் அனுபவங்களைப் பற்றி பேசினார். வானளாவ உயர்ந்துநின்ற கட்டடங்களை, அடுக்கிவைக்கப்பட்ட வீடுகள் என்றும், பேருந்துகளை, நகர்ந்து செல்லும் வீடுகள் என்றும் அவர் விவரித்தபோது, அதைக் கேட்ட மக்கள், அவரைச் சந்தேகக் கண்கொண்டு பார்த்தனர். அவர் சொன்னதெல்லாம் பொய் என்ற கருத்து, விரைவில் ஊரெங்கும் பரவியது. 'பொய்சொல்பவர்' என்ற அவப்பெயருடன் அவர் வாழ நேர்ந்தது. இறுதியில், அவரைப் புதைத்தக் கல்லறையில், அவரது பெயருக்குப் பதிலாக, 'பொய்சொல்பவர்' என்ற பட்டமே பொறிக்கப்பட்டது.

உண்மை சொல்பவர்களின் வாழ்வைச் சித்திரிக்கும் ஓர் உவமை இது. விவிலியத்தில் நாம் சந்திக்கும் பல இறைவாக்கினர்களின் கதையும் இவ்வாறே இருந்தது. அவர்களில் ஒருவரான எரேமியாவின் உயிருக்கு வந்த ஆபத்தை, இன்றைய முதல் வாசகம் (எரேமியா 38: 4-10) எடுத்துரைக்கிறது.

எரேமியா இந்த நெருக்கடிக்கு உள்ளானதற்குக் காரணம், அவர் சொன்ன உண்மை. யூதேயா நாடு, பாபிலோனிய மன்னரால் கைப்பற்றப்படும்; கொடும் துன்பங்கள் தொடரும் என்ற உண்மையை, மன்னரான செதேக்கியாவிடம் கூறினார், எரேமியா. மிகவும் கசப்பான இந்த உண்மையை, ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல், மன்னர் தடுமாறினார். அவரது தடுமாற்றத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சில தலைவர்கள், எரேமியா, ஒரு குற்றவாளி என பொய் பழி சுமத்தி, அவரைக் கொல்லும்படி மன்னரைத் தூண்டினர்.

இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும், தங்கள் சுயநல வாழ்வு சிதைந்துவிடக் கூடாது என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் இன்றையத் தலைவர்களின் முன்னோர்கள், இத்தலைவர்கள். இஸ்ரயேல் மன்னரோ, பாபிலோனிய மன்னரோ, யார் அரியணையில் அமர்ந்தாலும், தங்கள் சுகமான வாழ்வு மாறக்கூடாது என்பதில் குறியாய் இருந்த இத்தலைவர்கள், தங்கள் திட்டங்களுக்கு இருந்த ஒரே தடை, எரேமியா என்பதை உணர்ந்தனர். உண்மையைப் பேசும் அவரது உயிரைப் பறிக்க முயன்றனர். உண்மையைப் பேசியதால், உயிரை இழக்கவேண்டியிருந்த பலரை, இறைவாக்கினர் எரேமியா நம் நினைவுக்குக் கொணர்கிறார். அவர்களில் ஒருவர், எல் சால்வதோர் நாட்டில், கசப்பான உண்மைகளைப் பறைசாற்றிவந்த ஒரு பேராயர்.

1970களில், அமெரிக்க ஐக்கிய நாடு வழங்கிய நிதி உதவியுடன், எல் சால்வதோர் அரசு, ஏழைகளை, வதைத்து வந்தது. கருணை ஏதுமின்றி வறியோரைக் கொன்று குவித்த இராணுவத்திற்கு, அமெரிக்க அரசு அளித்துவந்த நிதி உதவியை உடனே நிறுத்தவேண்டும் என, சான் சால்வதோர் பேராயர், ஆஸ்கர் ரொமேரோ அவர்கள், அமெரிக்க அரசுத் தலைவர், ஜிம்மி கார்ட்டர் அவர்களுக்கு, மடல் ஒன்றை அனுப்பினார். இந்த மடல் அனுப்பப்பட்டு இரு மாதங்களுக்குப் பின், 1980ம் ஆண்டு, மார்ச், 24ம் தேதி, பேராயர் ரொமேரோ அவர்கள், திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையில், இராணுவ வீரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தான் எடுத்துரைத்த உண்மைகள், பலருக்கு, குறிப்பாக, சக்திமிகுந்த செல்வர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் சங்கடத்தை விளைவிக்கின்றன என்பதை நன்கு உணர்ந்திருந்த பேராயர் ரொமேரோ அவர்கள், தனது மரணத்தைப் பற்றியும் பேசத் தயங்கவில்லை. ஒருமுறை அவர் ஏழை விவசாயிகளுக்கு உரை வழங்கியபோது, "உங்கள் குருக்களையும், ஆயரையும் அவர்கள் கொன்றுவிட்டால், நீங்கள் ஒவ்வொருவரும் இறைவனின் குரலை ஓங்கி, ஒலிக்கச் செய்யும் ஒலி பெருக்கிகளாகச் செயல்படுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் இறைவாக்கினார்களாக மாறவேண்டும்... உயிர்ப்பு இல்லாத மரணத்தை நான் நம்பவில்லை. அவர்கள் என்னைக் கொன்றால், சால்வதோர் மக்களில் நான் மீண்டும் உயிர்ப்பேன்" என்று கூறினார்.

சால்வதோர் மக்களில் மட்டுமல்ல, உலக மக்கள் நடுவிலும் பேராயர் ரொமேரோ அவர்கள், உயிர்பெற்று வாழ்கிறார் என்பதற்கு, உலக அரங்கிலும், கத்தோலிக்கத் திருஅவையிலும் அவர் பெற்றுள்ள புகழ், சான்றாக விளங்குகிறது.

1998ம் ஆண்டு, ஆங்கிலிக்கன் சபையின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில், 20ம் நூற்றாண்டின் மறைசாட்சிகள் என்ற பெயரில் ஒரு சிலரின் உருவச் சிலைகள், ஆலயத்தின் வெளிமாடத்தில் வடிவமைக்கப்பட்டன. அவர்களில், மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர், மற்றும் பேராயர் ரொமேரோ ஆகியோரின் உருவங்கள் இடம் பெற்றுள்ளன.

2010ம் ஆண்டு, ஐ.நா.அவை, பேராயர் ரொமேரோ அவர்கள் கொலையுண்ட மார்ச் 24ம் தேதியை, உண்மை அறியும் உலக உரிமை நாள் (International Day for the Right to the Truth) என்று அறிவித்தது.

2015ம் ஆண்டு, மே 23ம் தேதி, பேராயர் ரொமேரோ அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையால், ஓர் அருளாளரென அறிவிக்கப்பட்டார்.

எல் சால்வதோர் நாட்டிற்கு மட்டுமல்ல, மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் அனைத்து இடங்களிலும், அருளாளர் ரொமேரோ, ஓர் இறைவாக்கினராகக் இன்றும் உயிர்பெற்று வாழ்கிறார்.

தன்னைச் சுற்றி நிகழும் அநீதிகள், அவலங்கள் அனைத்தையும் கண்டபின், இறைவாக்கினர்களால் அமைதி காக்க இயலாது. அவர்கள் பேசும் உண்மைகள், இவ்வுலகில் தீ மூட்டும்; அமைதியைக் குலைத்து, பிளவை உருவாக்கும். தீயை மூட்டவும், பிளவை உண்டாக்கவுமே தான் இவ்வுலகிற்கு வந்ததாக, இயேசு, இன்றைய நற்செய்தியில் முழங்குகிறார். (லூக்கா நற்செய்தி 12: 49-53)

சாந்தம், பொறுமை, தாழ்ச்சி, எளிமை ஆகிய அனைத்து நற்பண்புகளுக்கும் இலக்கணமாக விளங்கும் இயேசுவைப் புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் நமக்குத் தயக்கமில்லை. அமைதி, அன்பு என்ற அற்புதக் கொடைகளின் ஊற்று இயேசுவே என்று உலகறியப் பறைசாற்றவும் நாம் தயங்குவதில்லை. அத்தகைய இயேசு இன்றைய நற்செய்தியில் கூறியுள்ள வெப்பமான வார்த்தைகளை துணிந்து வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறோம்.

"உலகில் தீ மூட்ட வந்தேன், அமைதியை அல்ல, பிளவை உருவாக்கவே வந்தேன்" என்று இயேசு கூறும் வார்த்தைகள், நம்மைச் சங்கடத்திற்கு உள்ளாகுகின்றன. அதிலும் குறிப்பாக, தான் கொணரும் பிளவுகள், குடும்பத்திற்குள் உருவாகும் என்று இயேசு சொல்வது நம்மை அதிர்ச்சியின் சிகரத்திற்கு அழைத்துச் செல்கின்றது. நமது அதிர்ச்சிகளையும், பதட்டங்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு, இயேசு, தெளிவாக, தீர்க்கமாகக் கூறும் இந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

முதலில் இயேசு மூட்டவந்த தீயைப்பற்றி புரிந்துகொள்ள முயல்வோம். தான் வாழ்ந்துவந்த யூத சமுதாயத்தில் நிலவிய அநீதிகளை, அடக்குமுறைகளைக் கண்ட இயேசுவின் உள்ளம் பற்றியெரிந்திருக்க வேண்டும். அதேநேரம், நீதியும் அமைதியும் உலகில் நிலைக்கவேண்டும் என்ற வேட்கையும், அவர் உள்ளத்தில் பற்றியெரிந்திருக்க வேண்டும். அவர் உள்ளத்தில் பற்றியெரிந்த தீயை, மற்றவர் உள்ளத்தில் மூட்டவே தான் வந்ததாக இயேசு கூறினார்.

தீ மூட்டுதல் என்ற செயலால், ஆக்கப்பூர்வமான விளைவுகளும், அழிவும் உருவாகும் என்பதை நாம் அறிவோம். எடுத்துக்காட்டாக, நமது இல்லங்களில், சமையலறையில், தீ மூட்டுவதை எண்ணிப் பார்ப்போம். உணவைத் தயாரிக்க, நமது சமையலறையில் தீ மூட்டப்படுவது, ஆக்கப்பூர்வமான விளைவைத் தரும். ஆனால், எத்தனையோ இல்லங்களில், அதே சமையலறையில், மூட்டப்படும் தீ, 'தற்செயலாக'ப் பரவி, பல இல்லத்தலைவிகளின் உயிரைப் பறித்துள்ளது. தற்கொலையாகவோ, கொலையாகவோ, பெண்கள் தகனமாக்கப்படுவதற்கு, சமையலறைத் தீ, ஒரு கருவியாக அமைவது, நாம் அறிந்த கொடிய வேதனை.

குடும்பத்திற்கு உணவு படைக்கவேண்டும் என்ற அன்பினால் மூட்டப்படும் தீ, ஆக்கப்பூர்வமான விளைவுகளைத் தரும். புகுந்த வீட்டை நம்பி வந்த பெண்ணைக் கொளுத்துவதற்கு, ஆத்திரத்தில், வெறுப்பில் மூட்டப்படும் தீ அழிவாக அமையும். இயேசு, இவ்வுலகின் மீது கொண்ட அன்பினால் தீமூட்ட வந்தார். அந்தத் தீயில், தானே தகனமாகவேண்டும் என்பதையும், அவர், இன்றைய நற்செய்தியில், மறைமுகமாகக் கூறியுள்ளார் - லூக்கா 12: 49-50.

தன்னையேத் தகனப் பலியாக்கும் அளவுக்கு, இயேசு மூட்டும் இந்த நெருப்பில், அநீதி, தீமை, பொய்மை ஆகிய குப்பைகள் எரிந்து சாம்பலாகும். இதே நெருப்பில், நீதி, நன்மை, உண்மை ஆகிய பொன்மணிகள், இன்னும் சுத்தமாக்கப்பட்டு, ஒளிரும்.

தீ மூட்டுதல், ஆக்கத்தையும் அழிவையும் தரும் என்று இருகோணங்களில் சிந்தித்ததுபோல், இயேசு கொணரும் அமைதியையும் இரு கோணங்களில் சிந்திக்க முயல்வோம்.

உலக அரசுகள், மற்றும் பல்வேறு சமுதாய அமைப்புக்கள் 'அமைதி' என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது, அவை பெரும்பாலும் குறிப்பிடுவது, போரும், வன்முறைகளும் இல்லாத ஒரு நிலை. இதை நாம் ‘கல்லறை அமைதி’ என்ற உருவகத்தில் எண்ணிப்பார்க்கலாம். உலகம் தரும் அமைதி, கல்லறையில் காணப்படும் அமைதி. பல நியாயங்கள் இக்கல்லறையில் புதைக்கப்பட்டுள்ளன. அந்த நியாயங்களுக்குக் குரல் கொடுத்தவர்களும் அங்கு புதைக்கப்பட்டுள்ளனர். புதையுண்ட நீதிகளையும், நீதிமான்களையும் நாம் மறக்கவேண்டும் என்ற அக்கறையுடன், அங்கு எழுப்பப்பட்டுள்ள கல்லறைகள், மிக அழகான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டு, நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்திவிடும். உலக அரசுகளும், உலக அமைப்புக்களும் தரும் அமைதி, இத்தகைய கல்லறை அமைதி.

இத்தகைய அமைதியை இயேசு கொணரவில்லை. எனவேதான் இயேசு தன் பிரியாவிடை உரையில், “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல” (யோவான் 14:27) என்று தெளிவாகக் கூறினார். ஒவ்வொரு தனி மனிதருக்கும் உரிய மாண்பை, நீதியின் அடிப்படையில் வழங்குவதால் உருவாகும் அமைதியையே இயேசு கொணர்ந்தார். இத்தகைய அமைதி, வானத்திலிருந்து, ஓரிரவில் அல்லது ஒரு நாளில் இறங்கி வரப்போவதில்லை. வானிலிருந்து இறங்கி வந்த இறைமகன், இத்தகைய அமைதியை, அவர் வாழ்ந்த காலத்தில், அவர் வாழ்ந்த நாட்டிலேயே கொணர முடியவில்லை. ஆனால், உண்மையான அமைதி வளர்வதற்குத் தேவையான விதைகளைப் பயிரிட்டுச் சென்றார்.

ஒவ்வொரு மனிதருக்கும் உரிய மரியாதையைத் தர, நாம் மறுக்கும்போது, அவரவருக்கு உரிய நீதியை, விடுதலையைத் தர, நாம் மறுக்கும்போது, முதலில், நம் உள்ளத்தில், அமைதி வேரறுந்து போகிறது; தொலைந்து போகிறது. உண்மை அமைதியைத் தொலைத்துவிட்டு, உலகம் தரும் பொய்யான அமைதிக்கென போரிட்டு வருகிறோம்.

மனித மாண்பை அடித்தளமாகக் கொண்ட உண்மை அமைதி, நம் குடும்பங்களில் உள்ளதா என்பதை ஆய்வு செய்யவேண்டும். நம் இல்லங்களில் எளிய பணிகள் செய்வோரிடம் உண்மையான மதிப்பு, அன்பு, கொண்டுள்ளோமா என்பதில் நம் ஆய்வு துவங்கவேண்டும். இவர்களுக்கு உரிய மதிப்பையும், நீதியையும் வழங்க நாம் மறக்கும்போது, அல்லது, மறுக்கும்போது, நம் குடும்பங்களில் கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்பு உண்டு. அவ்வேளைகளில், நாம், நீதியான, உண்மையான நிலைப்பாடுகள் எடுத்தால், குடும்பத்திற்குள் பிளவுகள் உருவாகலாம். இத்தகையப் பிளவுகளையே, இயேசு, இன்றைய நற்செய்தியில் தெளிவாகக் கூறியுள்ளார் - லூக்கா 12: 52-53

தந்தை-மகன், தாய்-மகள், மாமியார்-மருமகள் சண்டைகள், அனைத்து இல்லங்களிலும் உள்ளதுதானே... இதை ஏன் இயேசு பெரிதுபடுத்தவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், இயேசு கூறும் பிளவுகள், ஆத்திரத்தில், உணர்ச்சிகளின் கொந்தளிப்பில், எழும் சண்டைகள் அல்ல. மாறாக, மனச்சான்றை மையப்படுத்தி நாம் எடுக்கும் நிலைப்பாட்டின் அடிப்படையில் உருவாகும் கருத்து வேறுபாடுகள், பிளவுகள்.

நன்னெறி, நற்செய்தி இவற்றின் அடிப்படையில் இந்தப் பிரச்சனைகளில் தகுந்த நிலைப்பாடுகளை எடுப்பதற்குப் பதிலாக, குடும்பத்தில் எவ்வகையிலாவது அமைதி நிலவினால் போதும் என்ற எண்ணத்துடன், உண்மைகளை மூடி மறைத்து, பூசிமெழுகி வாழ்வதால் உண்மையான அமைதியை நாம் இழக்கும் ஆபத்து அதிகம் உள்ளது.

இயேசு இவ்வுலகில் மூட்டிய தீ, நம் உள்ளத்தில் பற்றியெரியவும், அமைதியை வளர்க்கும் முயற்சிகளை நம் உள்ளங்களிலிருந்து, குடும்பங்களிலிருந்து துவங்கவும், உண்மை அமைதியின் அரசனான இறைவனை இறைஞ்சுவோம்.

இறுதியாக ஓர் எண்ணம்... ஆகஸ்ட் 15, இத்திங்களன்று, இந்தியத் தாய், தன் 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார். பல உயர்ந்த கலாச்சாரங்கள், மதங்கள் ஆகியவற்றின் தொட்டிலாக விளங்கும் இந்திய நாட்டில், ஒருவர் ஒருவரை மதித்து ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வளரவேண்டும் என்றும், இந்த மதிப்பின் வெளிப்பாடாக, நீதி, அமைதி, ஒற்றுமை ஆகிய சிறந்த பண்புகள் ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்தையும் நிறைக்கவேண்டும் என்றும், விண்ணேற்படைந்த அன்னை மரியாவின் வழியாக, இறைவனை மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.