2016-08-13 16:18:00

பங்களாதேஷ் காரித்தாசின் வெள்ள நிவாரணப் பணிகள்


ஆக.13,2016. கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் மக்களுக்கு, அந்நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனம், இடர்துடைப்புப் பணிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளது.

இயற்கைப் பேரிடர்களால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகும் ஏழை நாடாகிய பங்களாதேஷில், இவ்வாண்டு ஏற்பட்ட வெள்ளம், கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் என்று கூறப்படுகின்றது.

காரித்தாஸ் நிறுவனத்தின் தன்னார்வலப் பணியாளர்கள், அவசரகால உதவியாக, குறைந்தது 1,650 குடும்பங்களில், ஒவ்வொருவருக்கும் தேவையான பொருள்களையும், நான்காயிரம் அந்நாட்டுப் பணத்தையும் வழங்கியுள்ளனர்.

பங்களாதேஷின் 16 மாவட்டங்களில் குறைந்தது முப்பது இலட்சம் பேர் பல்வேறு நிலைகளில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.