2016-08-13 15:50:00

திருத்தந்தை தலைமையில் படைப்பைப் பாதுகாக்கும் உலக செப நாள்


ஆக.13,2016. “கிறிஸ்து மீதும், நம் சகோதர, சகோதரிகள் மீதும், நாம் வைத்திருக்கும் தாராளமிக்க மற்றும் பிரமாணிக்கமான அன்பை, மக்கள், நம் வாழ்வின் நற்செய்தியில் காண்பார்களாக” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

மேலும், வருகிற செப்டம்பர் முதல் தேதி சிறப்பிக்கப்படும், படைப்பைப் பாதுகாக்கும் உலக செப நாள் மாலை திருவழிபாட்டை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்துவார் என்று, திருப்பீட திருவழிபாட்டு அலுவலகம் அறிவித்துள்ளது. வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், செப்டம்பர் 1, வியாழன் மாலை 5 மணிக்கு இத்திருவழிபாடு நடைபெறும்.

இந்த உலக நாளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆண்டில் உருவாக்கினார். இது குறித்த திருத்தந்தையின் மடல், கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி கையெழுத்திடப்பட்டு, ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிடப்பட்டது.

படைப்பைப் பாதுகாப்பதற்கு இறைவனின் உதவியை இறைஞ்சுவதற்கும், நாம் வாழும் இவ்வுலகிற்கு எதிராக இழைத்த பாவங்களுக்கு கடவுளின் மன்னிப்பை கேட்பதற்கும், கடவுளின் அற்புதமான படைப்புக்கு நன்றி செலுத்துவதற்கும், இதனைப் பாதுகாப்பதற்கு, நமக்கிருக்கும் தனிப்பட்ட மற்றும் சமூகத்தின் பொறுப்புணர்வு புதுப்பிக்கப்படுவதற்கும் இந்நாள் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையினர், 1989ம் ஆண்டிலிருந்து இந்த உலக செப நாளைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.