2016-08-13 15:58:00

சவுதி அரேபியாவிற்கு 115 கோடி டாலர் இராணுவ ஆயுதங்கள்


ஆக.13,2016. ஏமன் நாட்டில் இடம்பெறும் சவுதி அரேபியாவின் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக, மனித உரிமை மீறல் புகார்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பதையும் தவிர்த்து, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, சவுதி அரேபியாவிற்கு, 115 கோடி டாலர் பெறுமான இராணுவ ஆயுதங்களை வழங்க இசைவு தெரிவித்துள்ளது.

இதில் 130 பீரங்கி வாகனங்கள், பிற ஆயுதங்கள் மற்றும் இராணுவ உதவிகள் உள்ளடங்கும்.

அமெரிக்க அரசின் இத்தீர்மானம், அமெரிக்க-சவுதி அரேபியா இராணுவத்திற்கிடையே ஒத்துழைப்பையும், இராணுவ நடவடிக்கைகளையும் ஊக்கப்படுத்தும் என்று, ஆசியச் செய்தி நிறுவனம் கூறுகிறது.

கடந்த ஆண்டில் மட்டும், அமெரிக்க ஐக்கிய நாடு, சவுதி அரேபியாவிற்கு, 2,000 கோடி டாலருக்கு அதிகமான மதிப்புடைய இராணுவ ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், ஏமன் நாட்டில், சவுதி அரேபியா, இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து, நூற்றுக்கணக்கான அப்பாவி குடிமக்கள் இறந்துள்ளனர் என்றும், அச்செய்தி நிறுவனம் கூறுகிறது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.