2016-08-12 15:36:00

கிழக்கு ஆசியாவில் அமைதி நிலவ செபியுங்கள்


ஆக.12,2016. கிழக்கு ஆசியாவில் அமைதி நிலவ வேண்டுமென்று அன்னை மரியாவிடம் செபிக்குமாறு, தென் கொரியக் கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள், அன்னை மரியாவின் விண்ணேற்பு விழாச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 15ம் தேதி சிறப்பிக்கப்படும் விண்ணேற்பு விழாவுக்கென செயோல் கர்தினால் Soo-jung அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், கொரியா உட்பட கிழக்கு ஆசியாவில், இராணுவப் பதட்டநிலை உச்சகட்டத்தில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

உலக அளவில், பயங்கரவாதம், பாகுபாடற்று கட்டவிழ்க்கப்பட்டுள்ளது என்று கூறும் கர்தினாலின் செய்தி, ஒன்றித்து வாழ்தல் மற்றும் புரிந்துகொள்தல் வழியாக, நம்பிக்கையின்மையைக் களைந்து அமைதிக்கான வழிகளைத் தேட வேண்டும் என்று கூறுகிறது.  

வட மற்றும் தென் கொரிய நாடுகளிடையே புரிந்துகொள்தலை உருவாக்கும் சாதனம் இரக்கமே என்றும், இரக்கத்தை நடைமுறைப்படுத்துவதன் வழியாக, நாம் ஒப்புரவை நாட வேண்டும் என்றும் கூறுகிறது கர்தினாலின் செய்தி.

ஆகஸ்ட் 15, தென் கொரியாவின் சுதந்திர தினமாகும். இந்நாடு, 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, ஜப்பானிய காலனி ஆதிக்கத்திலிருந்து  சுதந்திரமடைந்தது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.