2016-08-12 15:30:00

அலெப்போவில் அமைதி நிலவ கத்தோலிக்கர் நோன்பு, செபம்


ஆக.12,2016. சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவில் கடும் சண்டை இடம்பெற்றுவரும்வேளை, அந்நகரில் அமைதி நிலவ கத்தோலிக்கர் நோன்பிருந்து செபிக்கின்றனர் என்று, தலத்திருஅவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அலெப்போவின் நிலவரம் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, அந்நகர் அருள்பணியாளர் இப்ராஹிம் அவர்கள், என்ன நடக்கும் என்ற நிச்சயமில்லாத சூழலில், 72 மணி நேரங்கள் உண்ணா நோன்பிருந்து செபிக்குமாறு, அலெப்போ நகர் விசுவாசிகளும், மேய்ப்பர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும், அலெப்போவின் எல்லைகள் மூடப்பட்டிருப்பதால், அந்நகருக்குத் திரும்ப இயலாமல் பெய்ரூட்டில் இருக்கின்ற, அலெப்போ முதன்மைக் குரு பேரருள்திரு Georges Abou Khazen அவர்கள், இந்நகரின் அமைதிக்காக, கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சேர்ந்து செபிப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே, அலெப்போவில், புரட்சியாளர்க்கு எதிராகப் போரிடும் தரப்பு ஒன்று, மூன்று மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. ஆயினும், மனிதாபிமான உதவிகள் சென்றடைய இந்த நேரம் போதுமானதாக இருக்காது என்று, ஐ.நா. கூறியுள்ளது.

அலெப்போ நகர் போரின் அடையாளமாக மாறியுள்ளது. சிரியாவில் இடம்பெற்றுவரும் போரில், 2,80,000த்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர்.   

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.