2016-08-12 15:21:00

அமைதி, நீதிக்கு, தன்னையே அர்ப்பணித்தவர் ஆயர் டேலி


ஆக.12,2016. வட அயர்லாந்தின் துன்ப நாள்களில், அமைதியின் அடையாளமாக நோக்கப்பட்ட ஆயர் எட்வர்ட் கெவின் டேலி (Edward Kevin Daly) அவர்களின் மறைவுக்கு, தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கும் சிறப்பு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தனது வாழ்வு முழுவதையும், அமைதி மற்றும் நீதிக்கு, மிகுந்த தாராளத்துடன் அர்ப்பணித்தவர் ஆயர் டேலி (Edward Daly) என்று, அச்செய்தியில் பாராட்டியுள்ளார் திருத்தந்தை.

வட அயர்லாந்தின் டெர்ரி மறைமாநில முன்னாள் ஆயர் எட்வர்ட் டேலி அவர்கள், ஆகஸ்ட் 08, இத்திங்களன்று, தனது 89வது வயதில் காலமானார். இவ்வியாழன் மாலை இலண்டன்டெர்ரி, புனித யூஜின் பேராலயத்தில் நடைபெற்ற இவரின் அடக்கத் திருப்பலியில், திருத்தந்தையின் இச்செய்தி வாசிக்கப்பட்டது. இச்செய்தியை, அயர்லாந்து திருப்பீடத் தூதரகச் செயலர் பேரருள்திரு Amaury Medina Blanco அவர்கள் வாசித்தளித்தார்.

1972ம் ஆண்டு சனவரி 30ம் தேதி ஞாயிறன்று, டெர்ரி நகரில், அமைதியான எதிர்ப்பு ஊர்வலம் மேற்கொண்ட மக்கள் மீது, பிரித்தானிய படைவீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 14 பேர் இறந்தனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர். இவர்களில் ஆயர் டேலி அவர்களும் ஒருவர். அவர், அச்சமயத்தில், இரத்தம் தோய்ந்த வெள்ளைநிறக் கைக்குட்டையை உயர்த்திக் காட்டி, இதில் மிக மோசமான நிலையில் காயமடைந்த ஒருவருக்கு உதவினார். அந்நாள், இரத்தம் தோய்ந்த ஞாயிறு என அழைக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.