2016-08-11 16:04:00

தென் சூடான் நெருக்கடி நிலையை சீராக்க ஆயரின் அழைப்பு


ஆக.11,2016. தென் சூடான் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசு, பன்னாட்டு அமைப்புக்களின் உதவியுடன் நாட்டின் நெருக்கடி நிலையை சீராக்க வேண்டும் என்று, தென் சூடான் ஆயர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தென் சூடான் நாட்டைச் சேர்ந்த ஏய் (Yei) மறைமாவட்ட ஆயர், Erkolano Lodu Tombe அவர்கள், தங்கள் நாடு, பல மாதங்களாக அனுபவித்துவரும் மோதல் சூழல் விரைவில் முடிவுக்கு வர அனைத்து தரப்பினரும் திறந்த மனதுடன் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

நாட்டில் அமைதியைக் கொணர்வதற்கு முன்வந்துள்ள பிற நாட்டு நிறுவனங்கள், தென் சூடானில் அமைதியைத் திணிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளாமல், தங்கள் நாடு இப்பிரச்சனையைத் தானே தீர்ப்பதற்கு உதவ வேண்டும் என்று ஆயர் Tombe அவர்கள் கேட்டுக்கொண்டார்.

2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்ட அமைதி ஒப்பந்தம், இவ்வாண்டு ஜூலை மாதம் மீறப்பட்டது என்றும், தற்போது, தென் சூடான் நாட்டில் ஐ.நா.வின் அமைதிப்படையைச் சேர்ந்த 12,000 வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் தென் சூடான் கத்தோலிக்க வானொலி CRN கூறியுள்ளது.

ஆதாரம் : CANAA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.